
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாருக்கு தற்காலிக விடுப்பு வழங்க கட்சியின் மத்திய செயலவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதேவேளையில், துணைத் தலைவரின் பொறுப்புகளை இடைக்கால அடிப்படையில் மேற்கொள்வதற்காக டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை நூருல் இஸ்ஸா சமர்ப்பித்திருந்த நிலையில், அவரது விண்ணப்பத்தை மத்திய செயலவை பரிசீலித்து, கட்சித் தலைமையின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இதன்படி, 2026ஆம் ஆண்டு கெஅடிலான் தேசிய மாநாட்டிற்குப் பின்னர் தொடங்கி, பின்னர் அறிவிக்கப்படும் ஒரு தேதி வரை நூருல் இஸ்ஸாவுக்கு தற்காலிக விடுப்பு வழங்க மத்திய செயலவை ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தக் காலப்பகுதியில் நூருல் இஸ்ஸாவின் துணைத் தலைவர் பொறுப்புகளை சைபுடின் நசுதியோன் மேற்கொள்வார்.
இதனிடையே, கட்சியின் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கெஅடிலானின் புதிய தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.
மேலும், அண்மையில் நடைபெற்ற ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களின் முடிவுகளை கெஅடிலான் மத்திய செயலவை ஏற்றுக்கொள்வதுடன், மக்களின் தீர்ப்பை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



