29.1 C
Kuala Lumpur
Friday, August 7, 2026

Vetri

கடத்தலைத் தடுக்க AI, ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்துகிறது புக்கிட் அமான்!

🔥 Views : 2,440
👁 Reading Now : 49

கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றச்செயல்களை முறியடிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்த புக்கிட் அமான் திட்டமிட்டுள்ளது.

அதேவேளையில், அண்டை நாடுகளுடன் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் மலேசியாவின் நில மற்றும் கடல் எல்லைகளில் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யுஸ்ரி ஹசான் பஸ்ரி கூறுகையில், எல்லைப் பாதுகாப்பில் காவல்துறை தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமலாக்கத் தரப்புகளுடன் இணைந்து, நாட்டின் முக்கிய நுழைவாயில்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடத்தல் என்பது ஒரு நாட்டிற்குள் மட்டும் கட்டுப்படுத்தக்கூடிய குற்றச்செயல் அல்ல என்றும், அது எல்லை தாண்டிய பிரச்சினையாக இருப்பதால் அண்டை நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம் என்றும் முகமது யுஸ்ரி வலியுறுத்தினார்.

இதன் அடிப்படையில், மலேசிய இராணுவம், காவல்துறை மற்றும் தாய்லாந்தின் சம்பந்தப்பட்ட அமைப்புகள் பங்கேற்ற கூட்டத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இணக்கம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்பின் கீழ் கூட்டு நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த ரோந்துப் பணிகள், உளவுத் தகவல் பரிமாற்றம் மற்றும் வழக்கமான பணிக்குழுக் கூட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக பெர்லிஸ் முதல் கிளந்தான் வரையிலான எல்லைப் பகுதிகள், அத்துடன் சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் பரந்த எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கைகள் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதுடன், பெட்ரோல், டீசல், அரிசி, மாவு மற்றும் சமையல் எரிவாயு போன்ற தடை செய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் கடத்தலை முறியடிக்கவும் உதவும் என்று முகமது யுஸ்ரி தெரிவித்தார்.

AI மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களின் பயன்பாடு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புத் திறனை மேலும் அதிகரித்து, சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை விரைவாகக் கண்டறிய உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles