
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான FOMEMA மருத்துவப் பரிசோதனையில் பயன்படுத்துவதற்காக போலி கடப்பிதழ்களை தயாரித்து வழங்கி வந்த கும்பலை மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) முறியடித்துள்ளது.
இந்த நடவடிக்கையில், கும்பலின் முக்கிய மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்படும் இந்தோனேசிய ஆடவர் உட்பட மூன்று இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட புலனாய்வைத் தொடர்ந்து, தாமான் ஸ்ரீ கூச்சிங் மற்றும் தாமான் புக்கிட் செராஸ் பகுதிகளில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது 119 போலி கடப்பிதழ்கள், கடப்பிதழ்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் அச்சுப்பொறி, கைப்பேசிகள் மற்றும் RM1,500 ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், FOMEMA மருத்துவப் பரிசோதனையில் தோல்வியடைந்த அல்லது மருத்துவ ரீதியாகத் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டவர்களை இலக்காகக் கொண்டு இந்தக் கும்பல் செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
அவர்களிடம் ஒருவருக்கு RM80 முதல் RM130 வரை கட்டணம் வசூலித்து, தகவல்கள் மாற்றியமைக்கப்பட்ட போலி கடப்பிதழ்களை கும்பல் வழங்கியதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதேபோன்ற முறையில் செயல்பட்ட போலி கடப்பிதழ் தயாரிப்பு கும்பல்களுக்கு எதிராக மலேசிய குடிநுழைவுத் துறை மேற்கொண்டுள்ள ஐந்தாவது நடவடிக்கை இதுவாகும்.
இந்த மோசடி நடவடிக்கையில் மேலும் யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



