
இந்திய சமூகத்தின் கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக மேம்பாட்டை வலுப்படுத்தும் வகையில், மித்ரா மூலம் RM6.7 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான முன்னெடுப்பை மேற்கொண்ட மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், மித்ரா நிர்வாகம் மற்றும் மடானி அரசாங்கத்திற்கு அவர் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
மடானி டியூசன் கல்வித் திட்டத்திற்காக RM2.63 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதன் மூலம் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 2,343 SPM மற்றும் STPM மாணவர்கள் இலவசப் பயிற்சி வகுப்புகளால் பயனடைவது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று குணராஜ் கூறினார்.
அதேபோல், உயர்வு மடானி திட்டத்தின் கீழ் 128 இந்திய தொழில்முனைவோருக்கு RM3.05 மில்லியன் மானியம் வழங்கப்படுவது, இந்திய தொழில்முனைவோரின் வர்த்தக வளர்ச்சி மற்றும் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தர்ம மடானி திட்டத்தின் கீழ் 52 இந்து ஆலயங்களுக்கு RM1.04 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் வரவேற்றார். இதுவரை நாடு முழுவதும் 676 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு RM13.52 மில்லியன் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, இந்திய சமூகத்தின் மத, கலாசார மற்றும் சமூகத் தேவைகளுக்கு அரசாங்கம் அளித்து வரும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
“கல்வி என்பது நமது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்திற்கான முதலீடு. தொழில்முனைவு என்பது குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அடித்தளம். ஆலயங்கள் நமது சமயம், கலாசாரம் மட்டுமின்றி சமூக நடவடிக்கைகளின் முக்கிய மையங்களாகவும் விளங்குகின்றன. இந்த மூன்று துறைகளையும் ஒரே நேரத்தில் வலுப்படுத்தும் மித்ராவின் முயற்சி பாராட்டுக்குரியது,” என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
இந்திய சமூகத்தின் தேவைகளை உணர்ந்து திட்டங்களை முன்னெடுத்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கும், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணனுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், இத்தகைய திட்டங்கள் தகுதியான மக்களை நேரடியாகச் சென்றடைவது மிகவும் முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்த இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டார்.



