
இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மித்ரா (MITRA) மூலம் RM6.7 மில்லியன் நிதி இன்று வழங்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மடானி அரசாங்கம் இந்திய சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகக் கூறிய அவர், மித்ராவின் மூன்று முக்கிய முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன்படி, மடானி கல்வித் திட்டம், உயர்வு மடானி மற்றும் தர்ம மடானி ஆகிய திட்டங்களின் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், இந்திய தொழில்முனைவோர் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள் நேரடியாகப் பயனடையவுள்ளன.
2026 மடானி டியூசன் கல்வித் திட்டத்தின் கீழ், ஏழு மாநிலங்களில் திட்டத்தைச் செயல்படுத்த 28 பயிற்சி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 2,343 எஸ்பிஎம் (SPM) மற்றும் எஸ்டிபிஎம் (STPM) மாணவர்கள் பயனடையவுள்ளனர்.
இந்தத் திட்டத்திற்காக RM2.63 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2026 வரை ஐந்து மாதங்களுக்கு நடைபெறும் இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கட்டமைக்கப்பட்ட முறையில் இலவசப் பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும்.
மாணவர்களின் கல்விசார் சாதனைகளை மேம்படுத்துவது, கல்வி இடைவெளிகளைக் குறைப்பது மற்றும் குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.
அதேவேளை, இந்திய தொழில்முனைவோருக்கான உயர்வு மடானி 2026 முதல் தொடரின் கீழ், 128 தொழில்முனைவோர் RM3.05 மில்லியன் மானியத்தைப் பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொழில்முனைவோரின் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதுடன், அவர்களின் போட்டித்திறனை வலுப்படுத்தி, புதிய சந்தைகளுக்கு வர்த்தகத்தை விரிவுபடுத்த உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று ரமணன் தெரிவித்தார்.
மேலும், தர்ம மடானி திட்டத்தின் நான்காவது தொடரின் கீழ் 52 இந்து ஆலயங்களுக்கு RM1.04 மில்லியன் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை தர்ம மடானி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள 676 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் RM13.52 மில்லியன் நிதியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிதியுதவி ஆலயங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், மாணவர்களுக்கான கலாசார வகுப்புகள், சமூகக் கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சமூக, கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சமூக மையங்களை மேம்படுத்தவும் உதவும் என்று ரமணன் கூறினார்.
“கல்வி, தொழில்முனைவு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்திய சமூகத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை மடானி அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.



