
சுமார் 4 கிலோ எடையிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்ததாகக் கூறப்படும் 35 வயது மலேசிய நாட்டவர், சென்னை அனைத்துலக விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அந்த மலேசியப் பயணி, தம்மிடம் அறிவிப்பதற்கு எதுவும் இல்லை எனக் கூறி, ‘கிரீன் சேனல்’ (Green Channel) வழியாக விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அவரது பயணப்பெட்டியை அதிகாரிகள் X-ray பரிசோதனைக்கு உட்படுத்தியபோது சந்தேகத்திற்கிடமான பகுதிகள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பயணப்பெட்டிக்குள் இரகசிய அறைகள் அமைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.033 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 4 கோடி இந்திய ரூபாய் இருக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முதற்கட்ட விசாரணையில், அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து அந்தப் பொட்டலத்தைப் பெற்றதாகவும், அதனை சென்னையில் உள்ள சில நபர்களிடம் ஒப்படைப்பதற்காக கொண்டு வந்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்திய போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த மலேசியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் தொடர்புகள் மற்றும் கும்பலை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.


