
கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்தில், ஜெயபக்தி புத்தக நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ கு. செல்வராஜூவின் ஏற்பாட்டில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சிறப்பு பூஜைக்கு மணிவண்ணன் குருக்கள் தலைமை தாங்கினார். வேத மந்திரங்கள் முழங்க, இறைவழிபாடுகள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், ஆலயம் முழுவதும் பக்தி மணம் கமழ்ந்தது.
சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றதுடன், முருகப்பெருமானை தரிசிக்க திரளான பக்தர்கள் ஆலயத்தில் கூடி வழிபட்டனர். பக்தர்கள் அனைவரும் இறைவனைப் போற்றி வழிபட்டு, அருளும் நலமும் வளமும் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
ஆடி வெள்ளியின் சிறப்பையும், இறைவழிபாட்டின் மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் நடைபெற்ற இப்பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பக்தர்களின் அரோகரா முழக்கத்தால் ஆலயமே பக்திப் பரவசத்தில் திளைத்தது.
ஜெயபக்தி புத்தக நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இச்சிறப்பு பூஜை, பக்தர்களின் பேராதரவுடன் ஆன்மிகச் சிறப்பு மிக்க நிகழ்வாக அமைந்தது என்பதுடன் அன்னதானமும் வழங்கப் பட்டது.



