
தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பது என்ற ஜசெக (DAP) பேராளர்களின் முடிவை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்றுள்ளார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மை, இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டால், ஜசெக எடுத்துள்ள இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார்.
புத்ராஜயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நேற்று நடைபெற்ற ஜசெக பேராளர்கள் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் முன்வைத்த சிறப்புத் தீர்மானத்தைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதரவாக 1,857 பேராளர்கள் வாக்களித்த நிலையில், வெளியேறுவதற்கு ஆதரவாக 242 பேராளர்கள் வாக்களித்ததாக ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் அறிவித்தார்.
ஜசெகவின் 1,704 கிளைகளைச் சேர்ந்த மொத்தம் 4,264 பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்கத் தகுதி பெற்றிருந்தனர்.
அரசாங்கத்தின் சில செயல்பாடுகள் தொடர்பாக பேராளர்களிடையே அதிருப்திகள் முன்வைக்கப்பட்டபோதிலும், ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற வலுவான நிலைப்பாட்டையே பெரும்பாலான பேராளர்கள் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த முடிவு குறித்து கருத்துரைத்த டாக்டர் குணராஜ், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“மலேசியர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் பிரதமர் அன்வார் உறுதியுடன் செயல்பட்டு வருகிறார். இந்தப் பயணம் வெற்றிபெற அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம்,” என்று குணராஜ் தெரிவித்தார்.
அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் நலன், அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்களின் எதிர்காலம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இப்போது மலேசியாவுக்குத் தேவை மேலும் அரசியல் குழப்பம் அல்ல; நிலையான நிர்வாகம், வலுவான பொருளாதாரம் மற்றும் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் தலைமைத்துவமே தேவை,” என்று டாக்டர் குணராஜ் கூறினார்.
எனவே, ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கான ஜசெகவின் முடிவை வரவேற்பதுடன், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காக பிரதமர் அன்வாரின் தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் டாக்டர் குணராஜ் கேட்டுக் கொண்டார்.



