
செய்தி / படங்கள் : எம்.முருகன்
காரைக்குடி: கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி தலைமை இயக்குநர் முனைவர் சேது பாஸ்கர் ஏற்பாட்டில் அண்மையில் 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். நீதியரசர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பொன்னம்பல அடிகளார், முனைவர் சேது பாஸ்கர் தனது கடின உழைப்பால் உயர்ந்தவர் என்று பாராட்டினார்.
“சேது பாஸ்கர் என்னிடம் வந்து ஆலோசனை கேட்டபோது, விவசாயப் பண்ணையை உருவாக்கி, அதன் மூலம் கல்லூரியை உருவாக்குங்கள் என்று கூறினேன். தனது சொந்த உழைப்பால் இந்தப் பணியை சிறப்பாக முன்னெடுத்து, இன்று மிகப்பெரிய அளவில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அதிக அளவில் மரங்களை வளர்ப்பது இயற்கை வளத்தைப் பாதுகாப்பதற்கு மிகவும் முக்கியமானது என்றும், இதன் மூலம் மழைப்பொழிவு அதிகரிப்பதற்கும் பலருக்கு பயனளிக்கும் வகையிலும் அமையும் என்றும் பொன்னம்பல அடிகளார் கூறினார்.
இந்தப் பணியை முன்னெடுத்த முனைவர் சேது பாஸ்கருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முனைவர் சேது பாஸ்கர், நடப்பட்ட மரக்கன்றுகள் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும், குறிப்பாக மலேசியாவில் இருந்து அதிக அளவில் மரக்கன்றுகள் வாங்கி நடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“இங்கு இயற்கை வளம் அதிகமாக உள்ளது. தண்ணீர் வசதியும் நல்ல மண்ணும் உள்ளன. எனது கூட்டு முயற்சியுடன் ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஆலமரம்போல் உறுதுணையாக இருந்து இந்தப் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
மரக்கன்றுகள் நடும் பணிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் முனைவர் சேது பாஸ்கர் நன்றி தெரிவித்தார்.



