
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் சிறைப்பிடித்தது. நாட்டு மக்கள் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக்கோரி ராணுவ ஆட்சி தொடங்கிய நாள் முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் ராணுவம் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இரும்புக்கரம் கொண்டு இந்த போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 1,500-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பாவி மக்கள் 40 பேரை ராணுவ வீரர்கள் அடித்து, சித்ரவதை செய்து கொன்று புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



