
அமெரிக்க பள்ளி ஆசிரியை ஒருவர், கொரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டிருந்தது நடுவானில் தெரிய வர, சுயமாக முன் வந்து தன்னைத் தானே ஐந்து மணி நேரம் கழிப்பறையில் தனிமைப்படுத்திக் கொண்டார். மரிசா ஃபொடெயோ கடந்த டிசம்பர் 20ஆம் நாள் அமெரிக்காவின் சிகாகோ நகரத்திலிருந்து ஐஸ்லாந்தின் ரெய்க்ஜவீக் நகரத்துக்கு விமானத்தில் பயணித்த போது அவருக்கு தொண்டையில் வலி ஏற்பட்டதை உணர்ந்ததும், கைவசமிருந்த கொரோனா விரைவு சோதனை கருவியைப் பயன்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் பிறகு தன்னை கழிப்பறையில் தனிமைப்படுத்திக் கொண்ட அவர், முழு பயண நேரத்தையும் கழிப்பறையிலேயே கழித்துள்ளார். ஒரு விமானப் பணியாளர் மட்டும் அவருக்குத் தேவையான உணவு, குடிநீர், பானங்கள் போன்றவற்றை வழங்கினர். “அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என மிட்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த அந்த ஆசிரியை என்பிசி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட பயத்தைவிட என்னோடு விமானத்தில் பயணம் செய்த 150 பேருக்கும் கொரோனா வைரஸை பரப்பிவிடுவேனோ என்கிற பயம்தான் அதிகமாக இருந்தது” என அந்த நல்லாசிரியர் கூறினார்.



