
அணிவகுப்பு என்பது பொதுவாக மனிதர்களுக்கு உரியது; ஆனால், புத்தாண்டு பிறந்த நாளில் இந்தியாவின் பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் நேற்று கழுதைகளுக்கான அணிவகுப்பை போலீசார் நடத்தி உள்ளனர். ராஜஸ்தானில் கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவற்றைக் காணவில்லை என உரிமையாளர்கள் சிலர் போலீசில் புகார் அளித்தபோது, அதை அலட்சியம் செய்த காவல் துறை புகாரை வாங்க மறுத்தது. அந்த மாநிலத்தின் பாலைவனப் பகுதியில் மக்களின் பயணத்திற்கும் பொதி சுமக்கவும் சக்கர வண்டிகளை இழுக்கவும் வசதியானவர்கள் ஒட்டகத்தைப் பயன்படுத்துவார்கள். ஆனால், ஏழைகளின் தோழன் அங்கு கழுதைதான். இப்படிப்பட்ட கழுதைகளின் அவசியம் தெரிந்திருந்தும் புகார் அளித்தவர்கள் ஏழை மக்கள் என்பதால் அலட்சியம் செய்த காவல்துறை, பொதுமக்களுடன் அரசியல் கட்சியினரும் சேர்ந்து நடத்திய போராட்டத்திற்குப் பின் புகார்களைப் பதிவு செய்து இலட்சக் கணக்கான மதிப்புடைய கழுதைகளைத் தேடி கண்டுபிடித்தனர். ஆனால், கழுதைகள் ஒரே மாதிரி இருந்ததால் அவற்றை அடையாளம் காண்பதற்காக காணாமல் போன கழுதைகளின் உரிமையாளர்களை அழைத்து அவர்களின் முன்னால் கழுதை அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் சுவாரசியம் என்னவென்றால் கழுதைகளின் உரிமையாளர்களுக்கும் தங்களின் சொந்தக் கழுதையை அடையாளம் காண முடியவில்லை. பிங்கு, பப்லு, அஞ்சு என்றெல்லாம் பெயர் சொல்லி அழைத்த நிலையில் எந்தக் கழுதையும் பொருட்படுத்தாத நிலையில், ‘இவை எங்களுடைய கழுதைகள் அல்ல’ என்று கூறி கழுதை உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனால் காணாமல் போன கழுதைகளைத் தேடும் பணி தொடர்கிறது. உரிமையாளர்களின் அலட்சியத்தாலேயே கழுதைகள் காணாமல் போயுள்ளதாகவும் கழுதைகள் ஒரேமாதிரி இருப்பதால் அவற்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் ஜெய்ப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த அனுமன்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



