
21-ஆம் நூற்றாண்டில் கால் நூற்றாண்டை எட்டுகின்ற இவ்வேளையில், மகளிர் குலத்தினர் முற்போக்காக சிந்தித்து, புதுமையைக் காண்பதற்குப் பதிலாக, ஆண்களுக்கு எதிராக குரல் கொடுப்பதையே பெண்ணுரிமை என கருதுகின்றனர். காலமெல்லாம், பெண்களுக்கு எதிராக மல்லுக்கு நிற்பது பெண்கள்தான்; மாமியாரைப் புறக்கணிக்கும் மறுமகள், மறுமகளை அரவணைக்காத மாமியார், அண்ணிக்கு எதிரான நாற்றனார் என்று குடும்ப அளவிலும் பொது வெளியில் வேறு வகையிலும் பெண்கள் பொதுவாக ஒன்றுபட்டிருப்பதில்லை; கனரக வாகனம், ரயில், போர் விமானத்தை யெல்லாம் ஓட்டி, ‘பாருங்கள், ஆண்களுக்கு இளைப்பில்லை நாங்கள்’ என்று நெஞ்சுயர்த்துவது அவசியமன்று; முன்னை நாளில், தன்னந்தனியளாக வேட்டைக்குச் சென்று இரத்தக் கரையோடும் வேட்டையாடிய விலங்கோடும் இருப்பிடத்திற்கு திரும்பிய வரலாறு பெண்களுக்கு உண்டு; குடிசையிலும் புதரிலும் தங்கி பிள்ளைகளைப் பராமரித்த பெருமை ஆண்களுக்கு உண்டு; இன்றைய பெண்கள், பள்ளி-பல்கலைக்கழக பாட நூல்களை மட்டும் படிப்பதோடு நின்றுவிடாமல், ஏனைய நூல்களையும் கற்று இன்னும் செப்பம்பெற வேண்டும் உள்ளத்தால்! மீண்டும மகளிர் தின வாழ்த்து!



