26.4 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் இளையராஜா காய் நகர்த்தும் பாஜக-மோடி!

2014 முதல் இந்தியாவின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, 2024 பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று, மூன்றாவது முறையாக பிரதமராகி சாதனை புரிய நினைக்கிறார்.

இதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் செலுத்தும் பாஜகவும் இசைவு தெரிவித்து விட்டதாகவேத் தெரிகிறது.

இந்தியாவை ஓர் இந்து நாடாக மாற்ற வேண்டும்; பார்ப்பனர்களின் ஆதிக்கம் சிந்தாமல் சிதறாமல் நிலைபெற வேண்டும் என்பதுதான் பாஜக-வின் அடிப்படை; உயிர்மூச்சு. இந்த இரு அம்சங்களையும் பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மோடி கச்சிதமாக கடந்த எட்டு ஆண்டுகளாக நிறைவேற்றி வருகின்ற நிலையில், ஒரு பெரிய அரசியலை பொதியவைத்து இன்னும் ஒரு சில மாதங்களில் இளையராஜாவை இந்தியாவின் அடுத்தக் குடியரசுத் தலைவராக்குவதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

சின்ன வயதிலேயே ஆர்.எஸ். எஸ். என்னும் ராஷ்டிரீய சுய சேவை சங்கத்தில் இணைந்து பயிற்சி பெற்ற மோடி, ஆர்.எஸ்.எஸ். கொள்கை-சிந்தனைக்கு தன்னை அற்பணித்தவர். அதானால்தான், இந்திய ஒன்றிய அரச வேலைவாய்ப்புகளில் பொருளாதார அடைப்படையில் பின்தங்கிய உயர்சாதிக் குடும்பங்களுக்கு 10% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார் மோடி.

நேருவிடம் வாதாடி, பெரியாரின் போராட்டத்தை துருப்புச் சீட்டாகக் கொண்டு சமூகநீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டு சட்டத்தை உருவாக்கியவர் அண்ணல் அம்பேத்கர். அவரின் சிந்தனைக்கும் அவர் உருவாக்கிய சட்டத்திற்கும் வேட்டு வைக்கும் விதமாக உயர்சாதி மக்களில், அதாவது பிராமண குடும்பங்களில் 8 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெரும் (ஏழைக்?)குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்காக மறைமுக ஒத்தாசை- ஒத்துழைப்பு வழங்கும்பொருட்டு மோடி அரசு தீட்டிய சட்டம்தான் பொருளாதார அளவில் பின்தங்கி உள்ள உயர்சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு. இப்படி மோடி சட்டம் இயற்றி இருப்பது, அம்பேத்கரின் கொள்கைக்கு அடியோடு முரணானது.

ஆனால், இசை அமைப்பாளர் இளையராஜாவோ, மோடி, அம்பேத்கரைப் போன்ற தலைவர் என்கிறார்; அம்பேத்கர் இன்று உயிருடன் இருந்திருந்தால், மோடியைப் பாராட்டி இருப்பார் என்று இளையராஜா சொல்லி இருப்பது பச்சையான இன துரோகம்; அப்பட்டமான தமிழ்த் துரோகம்.

நலிந்த சமுதாயத்தைச் சேர்ந்த இளையராஜா, எப்படியோ தட்டுத் தடுமாறி அண்ணன் பாவலர் வரதராசன் மூலம் மேடை கண்டு, இசை அறிந்து, அப்படியே கோடம்பாக்கத்திலும் சாதித்துவிட்டார்.

அதனால், பொருளாதார கட்டமைப்பு என்பது இளையராஜாவைப் பொறுத்தவரை வலுவாக அமைந்துவிட்டது. இப்பொழுது அவருக்குத் தேவை, மேல்தட்டு மக்களைப் போன்ற பாவணையும் தோற்றமும்தான்.

தான் குடியிருக்கும் வீட்டில் இருந்து கோடம்பாக்கத்திற்கோ அல்லது இசையமைக்கும் மையத்திற்கோ அன்றாடம் பயணிக்கும் இளையராஜா, சென்னை நகர வீதிகளில் எத்தனையோ குடும்பங்கள் சாலையோரத்து குடிசையிலோ அல்லது கூடாரத்திலோ வசிப்பதைக் கண்டிருக்க முடியும்.

அப்படிப்பட்ட மக்களை அடையாளம் கண்டு, அவர்களின் குடியிருப்புக்கு ஏதாவது செய்வதற்கு மனம் வராத இளையராஜா, திருச்சி திருவரங்கத்தில் பள்ளிகொண்ட கோலத்தில் ரங்கநாதன் என்னும் பெயரில் திருமால் கொலுகொண்டிருக்கும் ஆலயத்தில் 14 அடுக்குகொண்ட புதிய கோபுரம் எழுப்பப்பட்டபோது, அதில், 11-ஆவது அடுக்குக்காக 11 லட்ச ரூபாய் கொடுத்தவர் இளையராஜா.

இளையராஜாவுக்கும் அந்த வைணவ தலத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும், தன் பெருமையைக் காட்டிக்கொள்வதற்காக அப்படி செய்த இளையராஜாவை, அந்தக் ஆலயத்தின் கருவறைக்குள் விடுவார்களா?

இளையராஜா அவ்வாறு முயன்றால், அங்கிருக்கும் பார்ப்பன குருக்கள்களும் மற்ற பரிவாரத்தினரும் விரட்டி அடிப்பார்கள்.

அதைப்போல, காஞ்சி சங்கர மடத்திற்கு லட்சக் கணக்கில் நிதி அளித்தபொழுது, பிராமணர்கள் பேசுவதைப் போல பேச முயன்று, அவர்களின் இளப்பமான பார்வைக்கு ஆளானார் இளையராஜா.

இவ்வாறெல்லாம், தான் பிறந்து வளர்ந்த பண்ணைப்புர சூழலையும் சொந்த மக்களையும் மறந்து, அக்கிரகாரத்தின் பக்கம் தன் பார்வையை இளையராஜா செலுத்தத் தொடங்கி நீண்டகாலம் ஆகிறது.

இல்லாவிட்டால், தன் அம்மாவிடன் நினைவிடத்தையே சமஸ்கிருத வகுப்பு நடத்த அனுமதி அளிப்பாரா?

சம்பாதிக்க மட்டும் ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே’ என தமிழ்ப் பாடலும் தமிழ் மொழியும் தேவை; சம்பாதித்தபின் வீட்டிலும் வீட்டு பூசனை அறையிலும் வாழ்க்கை முறையிலும் சம்ஸ்கிருதத்திற்கு முட்டுக் கொடுப்பது?

இது, தமிழன்னைக்கும் தமிழ் இனத்திற்கும் இளையராஜா செய்யும் பச்சையான துரோகம்.

இப்படிப்பட்ட இளையராஜாவைத்தான் மோடி இப்போது நாடி இருக்கிறார்.

மோடி பொதுவாக ஆள் பிடிப்பதில் வல்லவர்; அதனிலும் மேலாக, பொய்யான பிம்பத்தை கட்டமைப்பதிலும் இணைய தகவல் சாதனைத்தை பிரச்சாரத்திற்காக வகையாகப் பயன்படுத்துவதிலும் மிகமிக தேர்ந்தவர்.

ஆனால், தமிழ் நாட்டில்தான் அவரின் முயற்சி எதுவுமே பலிக்கவில்லை; ஆரம்பத்தில் தமிழக மக்களைப் பற்றி, குறிப்பாக வாக்காளர்களைப் பற்றி ஓர் இளப்பமான பார்வையும் மோடிக்கு இருந்தது; எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற திரை நட்சத்திரங்களின் பின்னால் அணிதிரளும் இந்தக் கூட்டத்தை எளிதில் வளைத்து விடலாம் என்ற எண்ணமும் இருந்தது.

அதன் அடிப்படையில்தான், 2014 பொதுத் தேர்தலின்போது தமிழ் நாட்டுக்கு பிரச்சாரத்திற்கு வந்த மோடி, நடிகர் விஜய்யை சந்தித்தார். அதன் நோக்கம் பலவாக இருந்தாலும், தலையாய நோக்கம், விஜய்யின் திரை ரசிகர்களைக் கவர்வதுதான்.

இதற்கிடையில், ரஜினிகாந்தை தங்கள் அரசியல் வட்டத்தில் இணைத்து ஆதாயம் பெற ஆண்டுக் கணக்கில் முயன்றனர்; அதற்கேற்ப அவரும் சில காய்களை நகர்த்தினார். ஆனாலும், முடிந்த முடிவாக எதையும் செய்யாமல் காலம் தாழ்த்திய ரஜனியால் மோடி வட்டம் கடைசியில் ஏமாந்தது;

ஒரு கட்டத்தில் தனிக் கட்சி தொடங்கி இருப்பதாக அறிவித்தார். தமிழக மக்கள் காட்டிய அதிருப்தியால் அதிலிருந்தும் பின்வாங்கி விட்டார்.

நட்சத்திர நாயகர் விஜய்யை சந்தித்தும் அதிரடி நாயகன் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்தும் ரஜனியை வளைக்கப் பார்த்தும் ஒன்றும் ஆகவில்லையே என்று ஏமாற்றம் அடைந்து, கடைசியில், தமிழ் நாட்டின் திராவிட – சமூகநல அரசியலுக்கு ஏற்ப காய் நகர்த்த ஆரம்பித்தார் மோடி.

அதன் வெளிப்பாடாகத்தான் இல.கணேசன் என்ற உள்ளூர் பிராமணத் தலைவர், ஆர்.எஸ்.எஸ். வகுத்த பெருந்திட்டத்தின்படி ஒரிஸாவில் இருந்து தமிழகத்துக்கு குடிபெயர்ந்த பார்ப்பன குடும்பத்தைச் சேர்ந்த எச்.ராஜா போன்ற தலைவர்களை யெல்லாம் ஒதுக்கிவிட்டு, நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், அருந்ததி சமுதாயத்தை சேர்ந்த எல். முருகன், ஆர்.எஸ்.எஸ். நிதி உதவியால் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணா-
மலை போன்றவர்களைக் கொண்டு தலைகீழாக நின்றுபார்க்கிறாது பாஜக.

மேலும், திமுக துணைப் பொதுச் செயலராக இருந்த வி.பி.துரைசாமி, தனக்கு நாடாளுன்ற மேலவை உறுப்பினர் பதவி கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்த நேரம் பார்த்து அவரின் சாதிக்காரனான எல்.முருகனை வைத்து பாஜக-விற்கு இழுத்தது அதன் தலைமை. சமூக நீதி மலர்ந்துள்ள தமிழகத்தின் மண்வாசனைக்கு ஏற்ப காய் நகர்த்த ஆரம்பித்தது பாஜக-வும் மோடி உள்ளிட்ட அதன் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும்.

அப்படி இருந்தும் தமிழகத்தில் பாஜக வளர முடியவில்லை.

காரணம் இதுதான்; செய்வதெல்லாம் அப்பட்டமான தமிழ் துரோகம்!.

தமிழக மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், வேளாண் குடிமக்கள், மீனவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு தமிழர்களுக்கும் கேடு விளைவித்துக் கொண்டு, சமஸ்கிருத மொழியை செல்லப் பிள்ளையைப் போல வளர்ப்பது, தமிழ் மொழியை சவலைப் பிள்ளை நிலைக்கு தள்ளுவது; அப்படியே விவசாய நிலங்களை அழிப்பது என துணிந்து துரோகம் செய்துகொண்டே தேர்தல் பிரச்சார நேரத்தில் மட்டும் தமிழர்கள் தொன்மையான குடியினர் என்பது; தமிழை செம்மொழி என்பது; மேடையில் மட்டும் வணக்கம் தெரிவிப்பது என்றெல்லாம் பம்மாத்து வேலைகளைச் செய்தால், எப்படி தமிழர்கள் இந்தக் கட்சியை நம்புவார்கள்?.

திருக்குறளையும் திருவள்ளுவர் சிலையையும் மறைத்துவிட்டு, மேடையில் மட்டும் ஏதாவது ஒரு திருக்குறளை சொல்வது, ஐநா மன்றத்தில் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்னும் வரியை ஒப்பிப்பது, தமிழ் நாட்டுக்குரிய நிதியைக் கொடுக்காமல் நிர்மலா சீத்தாராமனைவிட்டு நாடாளுமன்றத்தில் ஔவையாரின் ஆத்திச் சூடியை சொல்ல வைப்பது; அம்பேத்கரின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே அவரின் சிலைக்கு மாலையிடுவது என்றெல்லாம் கூத்துக்களை மட்டும் நடத்திக் காட்டினால் எப்படி தமிழர்கள் நம்புவார்கள்?

இப்பொழுது, பாஜக-விற்கும் மோடிக்கும் உண்மையிலேயே அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற 4 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக தோற்றுவிட்டது.

இத்தகைய சூழலில், 2024 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அடுத்தப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்பொழுதே, பாஜக சாயமும் மோடியின் பகட்டுக் காரியங்களும் வெளுக்க ஆரம்பித்துவிட்டன.

என்னதான், பகட்டாக உடுத்திக் கொண்டு, மேடையில் நாலாபுறமும் திரும்பிக்கொண்டே வானத்தை வளைப்பதைப் போல பேசினாலும், நலிந்த மக்களும் அடித்தட்டு தொழிலாளர்களும் இந்த மோடி பேசிக் கொண்டே இருக்கிறாரேத் தவிர, தங்களின் இன்னல்தீர ஒன்றும் வழியில்லையே என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒருவேளை, ஆட்சியை இழக்க நேரிட்டால், இனியொரு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கமுடியாது என்பதையும் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்ட இந்துத்துவ கட்டமைப்பும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கமும் சிதறிவிடுமே என்பதையும் உணர்ந்து, அதனால் எழுந்த கலக்கத்தில் ஆழ்ந்துள்ள பாஜகவும் மோடியும் இன்னும் இரண்டொரு மாதங்களில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலை அதற்கு வகையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிகிறது.

தற்பொழுது 14-ஆவது குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்த்(இராமநாத கோவிந்தன்) உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தவர். இதற்கு முன், இவர் ஆளுநராக இருந்தபோது, ஒரு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர். ஆனாலும், ‘இரப்பர் முத்திரை’ப் போன்ற குடியரசுத் தலைவர் பதவியை பாஜக இவருக்குக் கொடுத்தபோது, மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.

அதையடுத்து,
பாருங்கள்.. பாருங்கள்.. ,
நாட்டோரே, நல்லோரே,
முதலில் ஒரு அப்துல் கலாம், இப்பொழுது ராம்நாத் கொவிந்த் என சிறுபான்மை சமுதாயத்தினருக்கு நாட்டின் உயர் பதவியைக் கொடுத்து அழகு பார்ப்பது நாங்கள்தான் என்று பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக, அந்த வரிசையில் இப்பொழுது, நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினரும் திரைப்பட பாடல்-இசைத் துறை மூலம் இந்தியா முழுதும் நன்கு அறியப்பட்டவரும் ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்டவருமான இளையராஜாவுக்கு அந்தப் பதவியைக் கொடுத்து, நாட்டில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரிசையாக நாட்டின் உயர்பதவியை அளிக்கும் ஒரேக் கட்சி பாஜக-தான் என்று டமாரம் அடித்துக் கொண்டு, அதன் மூலம் சிறுபான்மையினர் மற்றும் தலித் சமுதாய வாக்குகளை தேசிய அளவில் அறுவடை செய்யவும் குறிப்பாக, தமிழ் நாட்டில் அதன்மூலம் பேரளவில் தேர்தல் அரசியல் லாபம் அடையலாம் என்றும் புதுடில்லி கணக்கு போடுவதாகத் தெரிகிறது.

ஏற்கெனெவே மேல்தட்டு மோகம் கொண்டு அலையும் இளையராஜாவுக்கு பதவி மோகத்தையும் நுகர வைத்தால் அவர் ஒதுக்கியா விடுவார்?

அதனால்தான், மனசாட்சி என்ற ஒன்றே இல்லாத பாஜக-வினரைப் போல, அம்பேத்கரும் மோடியும் ஒன்று என்று இளையராஜா கூவியிருக்கிறார்.

இந்து சமயத்தின் சாதிக் கொடுமையும் தீண்டாமை பெருங்கொடுமையும் தாங்க முடியாமல் பௌத்த சமயத்திற்கு மாறியவர் அம்பேத்கர்.

பள்ளி நாட்களில் ஊர்ப் பொது குளத்தில் இறங்கி குளித்துவிட்டார் என்பதற்காக மராட்டியத்தைச் சேர்ந்த சித்பவன பார்ப்பனர்கள் கங்கை நதியில் இருந்து 108 குடங்களில் தீர்த்த நீரைக் கொண்டு குளத்துக்கு தீட்டு கழித்த கொடுமைக்கு ஆளானவர் பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர்.

இந்து மதத்தின் சனாதன கொள்கைப்படி பெண்களுக்கு சொத்துரிமையும் இல்லை; சம்பாதிக்கும் உரிமையும் இல்லை;

இவை இரண்டையும் உடைக்கும் முகமாக சட்டம் இயற்றி பெண்களின் கல்விக்கும் வேலைவாய்ப்பும் வழியமைத்த அம்பேத்கர், பெரியாரின் வழி-காட்டுதலின்படி பெண்களுக்காக சொத்துரிமைச் சட்டத்தையும் இயற்றினார்.

இப்படி, காலமெல்லாம் இந்து சமய உயர்சாதிக்காரர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டே வாழ்ந்தவர் அம்பேத்கர். இந்த நிலை, அவரின் அரசியல் பயணத்திலும் தொடர்ந்தது.

இப்படிப்பட்ட அம்பேத்கர் இன்று உயிருடன் இருந்தால், உயர் சாதிக்காரர்-களின் நலனைக் காக்கவும் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நிலைநாட்டவும் பாடுபடும் பாஜக-வின் கொம்பு சீவிய காளையான நரேந்திர மோடியைப் பார்த்து பாராட்டுவார் என்று இளையராஜாவால் எப்படி சொல்ல முடிகிறது?

சொந்த இனத்திற்கும் தாய்மொழிக்கும் துரோகம் செய்துவிட்டு மேட்டுக்குடி பக்கம் நாட்டம் செலுத்துவதுடன் சமஸ்கிருத பயிர் வளர்க்கும் இளையராஜாவை புதுடில்லி ராஜ்பவனத்து வாடையும் தொற்றிக் கொண்டது போலும்.

அதனால்தான், தமிழ் நாட்டுப் பக்கம் எப்போதும் திரும்பிப் பார்க்காத, எந்தக் கருத்தும் தெரிவிக்காத பாஜக தலைவர்ஜே.பி. நட்டாவே, இளையராஜாவுக்கு இன்று பாதுகாப்பு அரணாக மாறியுள்ளார்.

எல்லாக் கூத்தும் இன்னும் கொஞ்ச நாட்களில் வெட்ட வெளிச்சத்துக்கு வராமலா போகும்?

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles