
நாட்டில் கடந்த 5 மாதங்களாக சராசரியாக தினசரி 18 பேர் திவாலாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாண்டு ஜனவரி தொடங்கி முதல் 5 மாதங்களில் 2,694 பேர் திவாலாகியுள்ளதாக திவால் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு மே மாதம் வரை திவால் அடைந்தவர்களில் 60 விழுக்காட்டினர் 25 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு மே மாதம்வரை 46,132 பேர் திவால் அடைந்துள்ளனர். இவர்களில் பாதிப்பேர் தனிப்பட்ட கடன்களுக்காக திவால் ஆனவர்கள்.
மேலும் தவணைமுறை கடன் திட்டத்தில் வாகனங்கள் வாங்கியது, வர்த்தகக் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு எனப்படும் பணப்பற்று அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கிவிட்டு அதற்கான பணத்தை சரியான முறையில் திரும்ப செலுத்தத் தவறியது போன்ற காரணங்களால் மக்கள் திவால் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.
