28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சமய மறுமலர்ச்சி நடவடிக்கை: இந்து சங்க மாநில-வட்டாரப் பேரவைகளுக்கு
தேசியத் தலைவர் தங்க. கணேசன் நினைவுறுத்தல்

மலேசிய இந்து சங்க மாநிலப் பேரவைகளும் வட்டாரப் பேரவைகளும் இந்து சமய சனாதன மறுமலர்ச்சி நடவடிக்கையில் முனைப்பு காட்ட வேண்டும் என்று சங்கத்தின் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க. கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மலேசியாவில் வாழ்கின்ற இந்துப் பெருமக்களின் சமய வளர்ச்சி, சமய பாதுகாப்பு, மதமாற்ற விழிப்புணர்வு, இளைய தலைமுறையினருக்கான சமயக் கல்வி உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டுதான் மலேசிய இந்து சங்கம் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது.

இத்தகைய நடவடிக்கைகளில் அண்மைக் காலமாக பல்வேறு காரணங்களால் சுணக்கம் நிலவி வந்ததை இந்து சங்க உறுப்பினர்களும் வட்டார-மாநிலப் பேரவைகளின் நிருவாகப் பொறுப்பாளர்களும் நன்கு அறிவார்கள்.

தற்பொழுது எல்லாத் தடைகளும் நீங்கிவிட்ட நிலையில், மலேசிய இந்து சங்கம், தேசிய அளவில் சமய நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

வட்டார இந்து மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் கூட்டுப் பிரார்த்தனை, ஆலயங்களில் ஆன்மிக சொற்பொழிவு, குருபூசை, இளம் பருவத்திலேயே சமயத் தெளிவு பெறும் வகையில் கையடக்க குறிப்பேடுகளை மாணவர்-களுக்கு வழங்குதல், இந்து சங்க அலுவலகங்களில் சமய நூலகத்தை அமைத்தல், சமய பேச்சாளர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற நடவடிக்கைளில் அக்கறை காட்டவேண்டிய தருணம் இது.

இவற்றுடன், திருமுறை ஓதுவதை வாழ்க்கை நெறியாக உருவாக்க இந்து சங்கத்தின் அனைத்து பொறுப்பாளர்களும் செயல்பட வேண்டும்.

தொண்டு செய்யும் வாழ்வே சமய வாழ்வு என்னும் அடிப்படையில் வாழ்ந்த நல்லடியார்களை ஆண்டவனே நேரில் வந்து ஆட்கொண்ட பெருமை படைத்தது சைவ நெறி; அத்தகைய சிவநெறிப் பாடல்களை இறப்பு வீட்டில் மட்டும் ஓதுதல் என்னும் தவறான போக்கு அண்மைக் காலமாக நிலவுகிறது.

இது மிகவும் வருத்தத்திற்கும் வேதனைக்கும் உரியது; விழித்திருக்கும் வேளைதோறும் பரம்பொருளை ஓதி ஒழுகுவதற்கான திருமுறைப் பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்வது குறித்து இந்து சங்கத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் இந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நன்னெறிமிக்க சமயநெறிதான் எதிர்கால தலைமுறையினரின் சீரான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும். அண்மையில்தான் நாடு முழுவதும் திருமுறை விழாக்களை நாம் நடத்திமுடித்தோம். உண்மையில், விழா நடத்துவதற்காக மட்டும் அல்ல திருமுறைப் பாடல்கள்; இந்துப் பெருமக்களின் அன்றாட வாழ்வில் ஓதி, உணர்ந்து, தெளிந்து இறைநேசப் பயணத்தில் நம்மை யெல்லாம் இணைத்துக் கொள்ள வேண்டிய திருமுறை குறித்த விழிப்புணர்வும் சொற்பொழிவும் அடிக்கடி இடம்பெற வேண்டும்.

எனவே, மலேசிய இந்து சங்க மாநில மற்றும் வட்டாரப் பேரவைகளின் பொறுப்பாளர்கள் இவற்றில் அக்கறையும் ஆர்வமும் கொண்டு நம் பாரம்பரிய சமயம் செழிக்க தொண்டாற்ற முன்வரவேண்டும் என்று மலேசிய இந்து சங்க புதிய நிருவாகக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்வதாக தங்க. கணேசன் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles