
🔊To listen to this news in Tamil, Please select the text.
மே மாத வாக்கில் நடைபெறவிருக்கும் கிளந்தான், திரெங்கானு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு ஆகிய மாநிலத் தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் பரப்புரைகளில் ஆளும் கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து காரசார விவாதங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஒற்றுமை அரசாங்கத்தில் கூட்டு சேர்ந்திருக்கும் கட்சிகள் அரசியல் நிலைத்தன்மை, பெரிக்காத்தான் முறைகேடாக செலவழித்த 9,300 கோடி ரிங்கிட், பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள், இன நல்லிணக்கம், சிக்கன நடவடிக்கைகள் போன்றவற்றை பேசும் என எதிர்பார்க்கலாம்.
எதிர்கட்சிக் கூட்டணியில் இருக்கும் பெர்சத்து, பாஸ், கெராக்கான் கட்சிகள் இனம், சமயம், பொருளாதாரப் பிரச்சினைகள், வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு, விலைவாசி போன்றவற்றை முன்னெடுக்கும்.
அதே வேளையில் அவை ஊழல், ஆட்சியில் நேர்மை, ஊழல் அரசியல்வாதிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தது, ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதையும் சுட்டிக்காட்டும் என தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மஸ்லான் அலி குறிப்பிட்டார்.
ஆய்வு நிறுவனத்தின் அனிஸ் அன்வார் சுஹைமி கூறும்போது, அமைச்சர்களின் செயல்பாடுகள், நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல் விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்றும் கிளந்தானில் வெள்ளப் பிரச்சினையை ஆளும் கூட்டணி பிரதானமாக கையில் எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



