27.5 C
Kuala Lumpur
Saturday, July 25, 2026

Vetri

தமிழ்ப் புத்தாண்டு சிக்கல் இன்னமும் தெளியாத மக்கள்!

🔥 Views : 30
👁 Reading Now : 67

காலம் வழங்கிய அருளாளர் தவத்திரு பாலயோகி சுவாமிகள்!

🔊To listen to this news in Tamil, Please select the text.

திருவள்ளுவரை மட்டுமா திருடுகிறீர்கள்? ஔவையையும்தான்!

  • நக்கீரன்

கோலாலம்பூர், ஏப்ரல் 15-
விண்ணையும் மண்ணையும் வகையாகக் கையாண்டு, பல்லாயிர ஆண்டு-களுக்கு முன்பிருந்தே தொன்மைச் சிறப்புடன் வாழ்ந்த தொல்குடியினரான தமிழரின் புத்தாண்டு தொடர்பாக தொடர்ந்து சலசலப்பும் கருத்துப் போரும் நிலவி வரும் வேளையில் நேற்று ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள்(2023) பிறந்திருக்கின்ற சோபகிருது ஆண்டு தொடர்பில் வாழ்த்து தெரிவித்துள்ள அருளாளர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் சித்திரரைப் புத்தாண்டு என்றும் குறிப்பிடாமல் தமிழ்ப் புத்தாண்டு எனவும் வகைப்படுத்தாமல் நடுநாயகமாக நின்று மங்களப் புத்தாண்டு என்று குறிப்பிட்டு தமிழ் மனத்தினருக்கும் இந்துப் பெருமக்களுக்கும் ஒருசேர வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பாங்கை எண்ணியெண்ணி வியக்கிறேன்.

சமய நல்லிணக்கத்துடன் இந்த மலையக மண்ணில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகத்திடையே ஓர்மை உணர்வையும் நிலைநாட்டும் வண்ணம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருக்கின்ற தவத்திரு பாலயோகி சுவாமிகளுக்கு அனைவரும் தலைதாழ வேண்டும்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும்
பெய்யும் மழை

என்று தமிழ் மூதாட்டி ஔவை பெருமாட்டி தான் வடித்த மூதுரையில் குறிப்பிட்டுள்ள கருத்து, இன்றைய சமய சான்றோரிடையே செம்மாந்து விளங்கும் ஆன்றோர் பெருமகனாரான தவத்திரு பாலயோகி சுவாமிகளுக்கு பொருந்துவதாகப் பார்க்கிறேன்.

இந்த உலகில் வாழ்கின்ற தொகுடியினரான தமிழ் மக்களுக்கு எத்தனையோ சிறப்புகள் உள்ளன. எதைச் சொல்வது, எதை விடுவது என்று தெரியவில்லை.

ஆனாலும் அண்மைக் காலமாக. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக ஒரு கலங்கத்தை சந்தித்து வருகின்றனர். இதைக் களையும் வழிதான் தென்படவில்லை. காரணம், மனிதனின் உடலிலேயே வாழ்ந்து கொண்டு, அவனுக்கே மரணத்தை விளைவிக்கும் கொடியக் கிருமியைப் போல, தமிழரோடு தமிழராக வாழ்ந்து கொண்டு, தமிழையும் பேசிக் கொண்டு தமிழர்தம் மேன்மைக்கும் தமிழின் தொன்மைக்கும் கேடு விளைவிக்கும் இத்தகையப் பாங்கினரை எவ்வாறு வகைப்படுத்துவதென்று புரியவில்லை.

திருவள்ளுவப் பெருந்தகைதான் சொல்வார் மக்கள் பண்பு இல்லாதவர்களைப் பார்த்து ‘மரம்போல்வர்’ என்று .. .,

அத்தகையப் பதர்க் கூட்டத்தினரைத் தூற்றி விலக்கும் மார்க்கம்தான் எட்டவில்லை.

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியா என்ற நாட்டை ஆங்கிலேயன் கட்டமைப்பதற்கு பலஆயிர ஆண்டுகளுக்குமுன்பே சொந்த நாட்டைக் கொண்டிருந்தவன் தமிழன். அந்த நாட்டில் இருந்து கடல்வழியே கலப் படை நடாத்திவந்து, இந்த மலை நாட்டின் வடபுலத்து கடார மண்டலத்தைக் கைப்பற்றி, தனி ஆட்சி நடத்தியவன் தமிழன்.

ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன் பயணக் காப்பியம் எழுதியவன் தென்புலத்து பாண்டிய மன்னன். தமிழர்களின் தொல் இலக்கியம் பனை மரத்துடன் இணைந்தது. இலக்கு என்று அழைக்கப்பட்ட பனையேடுகளில் வாழ்க்கை முறை அல்லது இயம் என்னும் சிந்தனை பதிக்கப்பட்டதால்தான் இலக்கியம் என்ற கூட்டுச் சொல் உருவானது.

நக்கீரன்

பனையேட்டில் எழுதும் முன், கல்வெட்டு என்னும் முறையைக் கொண்டி-ருந்தவர் தமிழர்; அதற்குமுன் சுடுமண் ஓடுகளில் இலக்கியம் சமைத்தனர். காட்டில் வாழ்ந்த ஆதித் தமிழர்கூட, மரங்களின் உயிர்ப் பட்டைகளில் குறிப்பைப் பதித்து வந்தனர்.

தமிழ்ச் சங்கம் என்னும் பெயரில் மொழிக்காப்பகத்தை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குமுன்பே உருவாக்கியவன் தமிழன். கூடவே, அறமும் மறமும் தப்பாத நல்லாட்சியையும் வழங்கினான்.

தமிழனுக்கு நீர் வளம் குறித்த தெளிவும் நீர் மேலாண்மையும் தெரிந்ததால்-தான் நீரணையைக் கட்டும் திட்டமும் உருவானது. வேளாண்குடியினரான தமிழர்க்கு பன்னாட்டு வர்த்தகமும் தெரிந்திருந்தது.

இதைப்போல, தமிழர்களின் நன்னெறிசார் ஆன்மிகப் பயணமும் தொன்மை-யானது. மிகமிக நெடியது.

இயற்கையின் பன்முக பரிமாணத்தை மிரட்சியுடன் வழிபட்ட தமிழன், முதன் முதலில் முறையாக வடிவமைத்துக் கொண்டது கொற்றவை வணக்க முறைதான். அந்த வாலைக்குமரி வழிபாடுதான், 19-ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மையப் புள்ளியான பங்கிங்காம் அரண்மனையும் மராட்டிய மன்னன் சத்ரபதி வீர சிவாஜியிடம் சிப்பாய்களாக செயல்பட்ட சித்பவன பார்ப்பனர்களின் அன்றைய தலைவனான பால கங்காதர திலகனும் கூட்டுசேர்ந்து இருதரப்பு நலனைப் பொதியவைத்து கூட்டாஞ்சோற்றைப் போல உருவாக்கிய கூட்டுசமயமான இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள சௌரம், சைவம், வைணவம், சாக்தம், கணபதியம், கௌமாரம் என்னும் 6 சமயக் கொள்கைகளில் ஒன்றானது; சாக்தம் என்னும் சக்தி வழிபாடுதான் தமிழர்களின் தொன்மையான தாய்வழிபாட்டு முறை.

ஆதித் தமிழர்தம் கொற்றவை வணக்க முறைக்கும் இந்து சமயத்தில் இடம்பெற்றுள்ள சக்தி வழிபாடான அன்னை உமையவள் வழிபாட்டிற்கும் இடையே தமிழர்கள் பல கடவுளரை வணங்கி வந்துள்ளனர்; அதைப்போன்று ஏராளமான முறை மதம் மாறியும் இருக்கின்றனர்.

நெருக்கடி ஏற்பட்டால்.., தலைதப்பாது என்ற நிலை நேர்ந்தால் தமிழர்கள் தாங்கள் கும்பிடுகிற சாமி, வாழும் இடம், அரசாளும் மன்னன் உட்பதை அனைத்தையும் சட்டென மாற்றிக் கொள்வார்கள் என்பதை கடந்த ஈராயிர ஆண்டு வரலாறு தெளிவாக சுட்டுகிறது.

இன்று பிறக்கும் சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று மனம் கூசாமல் அல்லது கொஞ்சமும் சிந்திக்காமல் சொல்லும் அன்பர்கள், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கிறிஸ்துவ அன்பர்களும் இஸ்லாமிய சகோதரர்களும் இன்றைய நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொள்வார்களா என்பதை சற்றேனும் சிந்திப்பதில்லை.

இப்படிப்பட்டவர்கள், தமிழ்க் கிறிஸ்தவர்களும் தமிழ் இஸ்லாமியர்களும் மதம் மாறியவர்கள் என்று எளிதாகச் சொல்லி தப்பிக்கப் பார்ப்பார்கள்.

அப்படிச் சொல்லும் இந்துத் தமிழர்களும் மதம் மாறியவர்கள் என்பதை இவர்கள் உணர மறுக்கின்றனர்.

ஆதியும் அந்தமும் இல்லாதது இந்து சமயம் என்பவர்கள், இந்து சமயத்தை முழுமையாக உணராதவர்கள் என்றுதான் கருதப்படுவர். இதற்குமுன் தமிழர்கள் முழு சைவர்களாக இருந்தனர். இந்த சைவம்தான், கி.பி. 6-7 ஆம் நுற்றாண்டுகளில் துளிர்த்து ஏறக்குறைய 650 ஆண்டுகளாகத் தழைத்து, செழிப்புடன் விளங்கியது.

இந்த சைவம், தொடக்கத்தில் நிலைபெறுமுன், அசைவமான முறையில்தான் வளர்ந்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பிணகாட்டின் நடுவே முகிழ்ந்ததுதான் சைவம்.

சமணனாக இருந்த பாண்டிய மன்னன், சைவனாக மதம் மாறியதும் சமணர்களான தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடினான். கழுவிலேற்றிக் கொன்றான். சைவ சமத்தைப் பரப்பவும் அதுவரை தான் பின்பற்றி வந்த சமணத்தை அழிக்கவும் பாண்டிய மன்னன் கைக்கொண்ட வழி, கொலைக் களம்தான்.

எவரையும் திருத்தியோ, மனம் மாற்றியோ சமணத்தில் இருந்து சைவத்திற்கு மாற்றவில்லை. சமணர்களை வளைத்துப் பிடித்து, பல்லாயிரக் கணக்கில் கழுவிலேற்றி கொலை செய்ததால், உயிருக்கு அஞ்சி சைவத்திற்கு மாறிய வரலாறு தமிழர்களுக்கு உண்டு.

கழுவில் ஏற்றுதல் என்றால், உறுதியான மரங்களை தரையில் நட்டு, மேல் பகுதியைக் கூராகச் சீவி, அதில் சமணத் தமிழர்களின் கைகளையும் கால்களையும் தனித் தனியாகக் கட்டியபின் அப்படியே ஆசனவாய்த் துவாரத்தில் செருகி விடுவார்கள்.

வானத்தைப் பார்த்து மல்லாந்தபடி தொங்கிக்கொண்டிருக்க வேண்டியது-தான்; மழையோ-வெய்யிலோ; பகலா-இரவா என்ற கணக்கின்றி, உணவும் தண்ணீருமின்றி பசியால் துடித்து, தொண்டை வறண்டு, உள்ளம் வாடி, உடல் வதங்கி அப்படியே உயிர்விட்டு பிணமாகத் தொங்கி தொடர்வதுதான் கழுவிலேற்றுதல் எனப்படும்.

உடலோடு உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும்போதே அண்டங் காக்கைகளும் பிணந்தின்னி கழுகுகளும் உடலைக் கொத்தி, பச்சை தசையை உண்ணும்பொழுது, கழுவிலே தொங்கும் மனிதர்கள், அந்தத் துயரை தாளமாட்டாமல், “ஐயோ உயிர்போகட்டுமே உடனே; இந்தக் கொடுமையைத் தாங்க முடியவில்லையே” என்று முனகியபடியே உயிர் விடுவார்கள்.

இப்படிப்பட்ட இன்னலுக்கும் கடுந்துயருக்கும் அஞ்சித்தான் மீதமிருந்த சமணத் தமிழரெல்லாம் மளமளவென்று நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு ருத்திராக்க மணியை அணிந்துகொண்டு சிவமயமான சைவத்தை ஏற்கத் தலைப்பட்டனர்; சமண சமய நாயகனான எண்குணத்தானை வணங்குவதையும் விட்டொழித்தனர்; இது நடைபெற்றது, கி.பி. 5-ஆம் நூற்றாண்டில்.

சமணமும் சைவத்தைப் போல தமிழ்த் தொண்டாற்றியதை நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். தமிழ்மறை திருக்குறள், மானுடக் காப்பியம் சிலப்பதிகாரம், துறவறம் பாடிய மணிமேகலை, நன்னெறி இலக்கியம் நாலடியார் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகள் யாவும் சமணம் தமிழுக்கு அளித்த கொடை.

வடக்கிலிருந்து தென்னகம் நோக்கி வந்த சமணத்தைப் போலவே, பௌத்தமும் வடக்கிலிருந்து இங்குவந்து பரவியது. அந்த புத்த சமயம் இலங்கையில் பரவுவதற்குமுன் தமிழகம் முழுவதும் ஒரு கட்டத்தில் விரவி இருந்தது.

அப்பொழுதுதான், பெண்ணின் கருவறைக்குள் ஒரு யானை புக முயல்வதைப் போன்ற சிற்பங்களும், யானைத் தலையுடன்கூடிய மனித உருவங்களும் செதுக்கப்பட்டன.

புத்தர் பிறப்பதற்குமுன் அவரின் தாயார் மாயாவதி, கருவறைக்குள் ஒரு வெண்யானை புகுவதைப் போல கனவு கண்டாராம். அதன் அடிப்படையிலும் யானையை அறிவு-வலிமையின் அடையாளமாக பௌத்தம் கருதியதாலும் யானை உருவத்தை பௌத்தர்கள் பெரிதும் போற்றினர்; இன்றளவும் சிங்களர்கள் யானையை பௌத்த அடையாளமாகக் கொண்டிருக்கின்றனர்.

சில இடங்களில் புத்தர் ஒருக்கணித்து படுத்திருப்பதைப் போன்ற வடிவங்களும் வேறு சில இடங்களில் புத்தரின் நினைவாக அவரின் பாதங்களும் சிலைகளாக செதுக்கப்பட்டன.

இந்த பௌத்த சமயமும் கடுமையான வன்முறையை மேற்கொண்டும் ஆசீவர்களின் தலையை சீவியும்தான் பரவியது.

அந்த வகையில், பேரளவில் மதமாற்ற நடவடிக்கையை மேற்கொண்ட முதல் நபர், அசோக சக்கரவர்த்திதான்; இவர், பாடலிபுரத்து பெரும்போருக்குப் பின். மனம் மாறி முழு சமயவாதியாக மாறினார்.

அந்தச் சமயத்தில் தமிழர்களின் ஆதி சமயமான ஆசீவகம், வடக்குத் திசை நோக்கி நகர்ந்து பேரளவில் பரவி இருந்தது. அசோக மன்னனே பௌத்தத்திற்கு மதம் மாறும் முன், ஆசீவராகத்தான் இருந்தார். அசோகனின் அப்பாவும் ஆசீவகர்தான்.

அப்படிப்பட்ட அசோகன், ஓர் ஆசீவகனின் தலையைக் கொய்து வந்தால், ஒரு தங்கக் காசு என்று முரசறைந்து கொலைக்காரர்களை ஏவிவிட்டு, பல்லாயிரக் கணகான ஆசீவகர்களைக் கொன்றுதான் பௌத்தத்தைப் பரப்பினான்.

முதன் முதலில் மதமாற்றத்தை பேரளவில் வலிந்து நிகழ்த்தியவனும் அதற்காக கொலைவாளுடன் திரிந்தவனும் மாமன்னன் அசோகன்தான்.

கி.மு. 5-ஆம் நூற்றாண்டு அளவில் உருவான ஆசீவகம், ஏறக்குறைய 1,100 ஆண்டுகளாக தமிழரோடு இணைந்து செழித்தபின், அசோகனால் வீழ்த்தப்பட்டது. இவ்வாறு அசோக பெருமன்னனால் பரப்பப்பட்ட பௌத்த சமயம், தமிழகம் இலங்கை மட்டுமல்ல; இன்றைய பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், அவற்றையும் கடந்து சீனா, சீனாவில் இருந்து மங்கோலியா, கொரியா, ஜப்பானிய தேசங்களுக்கெல்லாம் பரவியது.

மொத்தத்தில், தமிழனின் ஆன்மிகப் பாதை நெடுகிலும் வன்முறை வெறியாட்டமும் உயிர்ப் பறிப்பும் நடைபெற்று, மத மாற்றங்களும் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளன. காலந்தோறும் மதம் விட்டு மதம் மாறியே வந்துள்ளான் தமிழன்.

ஆசீவகத்தை பௌத்தம் அழித்தது; சமணத்தை சைவம் வீழ்த்தியது; பிற்காலத்தில் பிராமணர்கள் கட்டமைத்த வைணவம், பௌத்தத்தை பொசுக்கிவிட்டது; இந்து சமயம் என்ற பெயரில் சைவத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டது இதே வைணவம்.

படுத்திருந்த புத்தரின் சிலையெல்லாம் திருமாலின் உருவங்களாக மாற்றப்-பட்டன; புத்தரின் பாதங்களெல்லாம் இராமர் பாதங்களாக சொல்லப்பட்டன. இராமேஸ்வரத்தில் இருந்துதான் இராமர் தென்னிலங்கையை நோக்கினார்; அந்த இடத்தில்தான் இராமர் பாதம் இருக்கிறது என்பதெல்லாம் பச்சையான பொய்.

அதைப்போல பௌத்த சமய யானை உருவத்தைக் கொண்டு, கணபதியக் கொள்கையை உருவாக்கியது வைணவம்; அதற்காக ஏழெட்டு கதைகளும் விஜய நகர பேரரசு காலத்தில் புனையப்பட்டன; இதில் ஆபாசக் கதைகளும் உண்டு. புத்தரின் காவி வண்ணத்தையும் களவாடிக் கொண்டது வைணவம்.

தமிழ்க் கடவுள் முருகனுக்கும், பார்ப்பனப் பெண்ணான தெய்வானையை இரண்டாம் தாரமாக்கி, பூணூலையும் மாட்டிவிட்டு, சுப்ரமண்யன் என்று பெயரை மாற்றி தன்வயப்படுத்திக் கொண்டது பார்ப்பனியம்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆபாசக் கதையை உருவாக்கி கதைகட்டி விடுவதற்கு ஏதுவாக, தெலுங்கு மரபைச் சேர்ந்த வியஜநகரப் பேரரசு, பல்லவர் ஆட்சிகள் துணைபோயின.

பார்ப்பனிய மேலாதிக்கம் தலைதூக்கிய இந்த வேளையில்தான் தமிழுக்கும் தமிழருக்கும் கேடான பற்பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர் பார்ப்பனர்கள்.

இவ்வாறு வைணவம் பரவுவதற்கு மக்களும் ஒத்தூதினர். காரணம் ஆசீவகம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட சமயக் கொள்கைகள் இறைவனுக்கு துதிபாடுவதைவிட, மனித நேயத்தை முன்னிறுத்தின. அறிவியலையும் கடுமையான கட்ட்ப்பாடு-ஒழுக்கத்தையும் முன்னெடுத்தன.

ஓர் ஆசீவகர், பலாப் பழத்தை மரத்தில் இருந்து வெட்டியதும் அதன் காம்பைச் சுற்றியுள்ள முற்களைக் கணக்கிட்டு, பலாப் பழத்திற்குள் எத்துணை சுளைகள் உள்ளன என்பதை துள்ளியமாக கணக்கிடுவாராம். தன் நிழலை வைத்தே காலத்தை கச்சிதமாகக் கணக்கிடுவாராம். மழை, கடும் வெய்யில் எல்லாவற்றையும் கணிக்கும் கணியராக ஒவ்வொரு ஆசீவகரும் இருந்துள்ளனர்.

அதைப் போல சமணத்திலும் கடுமையான நன்னெறி கட்டுப்பாடுகள் இருந்தன்; பொழுது சாய்ந்துவிட்டால் சாப்பிடக்கூடாது; மணம் முடித்திருந்தாலும் சந்நியாசியைப் போல வாழவேண்டும் என்றெல்லாம் மக்கள் வாழ்ந்த நிலையில், வைணவம் கட்டிவிட்ட கதைகள் மக்களை வெகுவாக கவர்ந்தன. அதற்கு, மன்னர்களும் வழியேற்படுத்திக் கொடுத்தனர்; அதிகாரத்தையும் பயன்படுத்தினர்.

இப்படிப்பட்ட கதைகளில் ஒன்றுதான் நாரதரும் கிருஷ்ணரும் சேர்ந்து குடும்பம் நடத்தி, 60 ஆண்டுகள் கதற கதற இல்லறம் நடத்தி, வரிசையாக 60 பிள்ளைகளை இடைநில்லாமல் பெற்றதாகச் சொல்லப்படுவது.

கோகுலத்தில் இருந்த நாரதர், கிருஷ்ணர் எப்போதும் கோபியருடன் உல்லாசமாக இருப்பதைப் பார்த்து, மனம் சஞ்சலித்து, கிருஷ்ணா எனக்கு ஒரு கோபியைக் கொடுத்தால் ஆகாதா என்று கேட்டாராம்.

அப்படியா, எந்த குடிலில் நான் இல்லையோ, அந்தக் குடிலில் இருக்கும் கோபியுடன் நீ உல்லாசமாக இருக்கலாம் என்று கிருஷ்ணர் கூறியதைக் கேட்டு, இன்பம் பொங்க உடனே ஒரு கோபியின் வீட்டுக்குள் சென்ற நாரதர், அங்குள்ள கோபியுடன் கிருஷ்ணன் இருப்பதைக் கண்டு, அடுத்தக் குடிலுக்குச் சென்றுள்ளார்.

அங்கும் அதேக் காட்சியைக் கண்டு, அலறியடித்துக் கொண்டு வெளியே வந்து அடுத்தக் குடிலுக்குச் சென்றுள்ளார். அங்கும் காட்சி மாறவில்லை.

சளிப்பும் ஆத்திரமும் பொங்க வெளியே வந்த நாரதர், கிருஷ்ணா என்னை நீ இப்படி ஏமாற்றலாமா என்று கேட்டு புலம்பி இருக்கிறார்.

“உனக்கு இப்போது ஆசை தீர வேண்டும்; அவ்வளவுதானே; சரி, நீ உடனே அருகில் இருக்கும் நீர் நிலையில் குளித்துவிட்டு வா” என்றாராம் கிருஷ்ணர். அங்கு சென்று தண்ணீரில் மூழ்கியதும் நாரதர் ஓர் அழகானப் பெண்ணாக மாறிவிட்டாரம்.

அந்த அழகில் மயங்கி, பெண் உருவில் இருந்த நாரதருடன் சேர்ந்து குடும்பம் நடத்தியதால் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்களில் 37-ஆவது பிள்ளையின் பெயர்தான், இன்று பிறந்திருக்கும் ஆண்டின் பெயரான சோபகிருது;

இன்னும் 59 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இதே சோபகிருது ஆண்டு, மீண்டும் பிறக்கும். இந்த கேடுகெட்ட, ஆபாச முடைநாற்றம் வீசுகின்ற, சகிக்கமுடியாத ஓரினச் சேர்க்கையின் எச்சமாகக் கருதப்படும் சோபகிருது பிறப்பைத்தான் ‘தமிழ்ப் புத்தாண்டு’, ‘தமிழ்ப் புத்தாண்டு’ என்று தமிழரில் ஒரு பிரிவினர் கொண்டாடிக் குதூகலிப்பது ஒருபுறம் இருக்க, மற்றவர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இந்தக் கதையை நானும் சொல்லி சொல்லி ஓய்ந்துவிட்டேன். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

இந்த ஆபாசக் கூத்து உங்களோடு நிற்கட்டுமே; ஏன் இந்த உலகின் தொன்மையான ஓர் இனத்தின் தாய்மொழியான செம்மொழியாம் தமிழின் புத்தாண்டு என்று சொல்லித் தொலைக்கிறீர்கள்.

அரச வானொலியான மின்னல் பண்பலை வானொலியில் சித்திரைப் புத்தாண்டு என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அது உங்களின் செவிகளை எட்டவில்லையா?

ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி ஊடகத்தின் இந்தியப் பிரிவான வானவில்லை சேர்ந்ததுகளுக்கு ஓரின ஆபாசக் கூத்து மிகவும் பிடிக்கும்போலத் தெரிகிறது. அதுகளும் தமிழ்ப் புத்தாண்டு என்றுகூறி கும்மாளமிடுகின்றன.

மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் கேடுகெட்ட தலைமை தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயரில் வெளியிட்டுள்ள மின் பதாகையில் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிட்டு, தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகளையும் திருட முனைந்துள்-ளது.

முப்பத்து முக்கோடி தேவர்களைக் கொண்ட இந்து சமயத்திற்கு அடையாளத்திற்கா பஞ்சம்? உலகப் பொதுமறை யாத்த திருவள்ளுவரை ஏன் அபக்கரிக்க முயல வேண்டும்? காவியுடுத்தி அவரையும் இந்த ஆபாசக் கூத்துடன் எதற்காக இணைக்க வேண்டும்?.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வரையறுக்கும் வள்ளுவத்துக்கும் சாதிக்கொரு நீதி சொல்லும் சனாதனத்துக்கும் தமிழ்ப் புத்தாண்டுக்கும் என்ன தொடர்பு?

திருவள்ளுவரை மட்டுமா திருடுகிறீர்கள்? ஔவையையும்தான்!

இந்த ஔவைக் கூட்டத்தில் ஓர் ஔவை திருட்டு ஔவையாக இருக்க வேண்டும்; அல்லது பார்ப்பன ஔவையாக இருக்க வேண்டும்; இல்லாவிடில் பொய்யாக கட்டமைக்கப்பட்ட போலி ஔவையாக இருக்க வேண்டும்; அதனால்தான், ஏறக்குறைய 4,000 ஆண்டுகளாக செம்மொழித் தகுதியுடன் விளங்கும் தமிழின் தொல்மாண்பை சிதைக்கும் விதமாக, புதிதாக கட்டமைக்கப்பட்ட பிள்ளையாரிடம் பால், தேன், பாகு, பருப்பு இவற்றைத் தருகிறேன்; நீ எனக்கு சங்கத் தமிழைக் கொடு என்பதைப் போல ஔவையின் பெயரால் பாட்டெழுதப்பட்டுள்ளது.

எப்பாதோ நிலைத்துவிட்ட தமிழை, இப்போது வந்து பிள்ளையாரிடம் கேட்பது, தமிழின் மாண்பைக் கெடுப்பதற்கு சமம். தமிழர்களில் ஒருசாரார், கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் தமிழைக் கெடுக்க தொடர்ந்து முனைப்பு காட்டி வருகின்றனர்.

ஆனாலும் 33 ஔவையரில் மற்ற 32 ஔவையரும் நல்ல ஔவையர்தான். அத்தகைய ஔவையை, இந்த சித்திரைப் புத்தாண்டு பதாகையில் இந்து தரும மாமன்றம் இனைத்திருப்பது தமிழ்ப் பண்பாட்டையும் தமிழிய மேன்மையையும் கெடுக்கின்ற செயல்.

அவர்கள் அப்படியே நாரதர்-கிருஷ்ணர் தம்பதியரின் 37-ஆவது பிள்ளையின் பெயர்தான் இந்த சோபகிருது ஆண்டு என்பதையும் சுட்டிக்காட்டினால் பொருத்தமாக இருக்கும். அவ்வாறு செய்யாதது சுத்த கயமைத்தனம்.

இன்று மாலையில் நெகிரி செம்பிலான், பண்டார் ஸ்பிரிங் ஹில், அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் தமிழ்ப் புத்தாண்டு சொற்பொழிவாற்றும் தவத்திரு மகேந்திர சுவாமியும், இன்றையப் புத்தாண்டு, நாரதர்-கிருஷ்ணர் தம்பதியரின் 37-ஆவது பிள்ளையின் பெயரால் பிறக்கிறது என்று பகிரங்கமாகச் சொல்வாரா என்று தெரியவில்லை.

தமிழ்ப் புத்தாண்டு என்று வாழ்த்து தெரிவித்து காணொளி வெளியிட்டுள்ள அ.ப.முத்துக்குமார சிவாச்சாரியாரும் இன்றையப் புத்தாண்டு, நாரதர்-கிருஷ்ணர் தம்பதியரின் 37-ஆவது பிள்ளையின் பெயரால் பிறக்கிறது என்று பகிரங்கமாக அறிவிப்பாரா என்பதும் தெரியவில்லை.

இப்படிப்பட்டவர்களுக்கு காலம்தான் தக்க விளக்கத்தை அளிக்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles