26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

மோகன்ஷான் அலவன்சும் போக்குவரத்து செலவும் கேட்க இந்து சங்கம் என்ன வர்த்தக அமைப்பா?

தங்கும் விடுதியைப் போல பயன்படுத்திய மோகன்ஷான் இந்து சங்கத்திற்கு வாடகை செலுத்தினாரா?

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

கோலாலம்பூர், மே 28:
மலேசிய இந்து சங்கத்திற்கு 2022 ஜூலை மாதம்வரை தலைவராக இருந்தவர் டத்தோ மோகன் ஷான்தான்.

அவருக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக 1,000 வெள்ளி வழங்குவதென 2019இல் இந்து சங்க மத்தியப் பேரவை முடிவெடுத்தது உண்மையானால், 2019, 2020, 2021, 2022 ஆகிய வருடங்களுக்கான ஊக்கத் தொகையை மோகன் ஷானே எடுத்துக் கொண்டிருக்கலாமே? அவர்தானேத் தலைவர்? நான்கு ஆண்டுகளாக மோகன்ஷான் தூங்கிக் கொண்டிருந்தாரா?

மோகன் ஷான் ஒரு தொழில் முனைவர்; சொந்தமாக அச்சகம் நடத்துகிறார். மலேசிய இந்து சங்க ஆண்டறிக்கை உட்பட முக்கியமான அச்சு வேலைகளை இவரின் அச்சகத்தில் அச்சடித்துக் கொடுப்பதும் அதற்கான செலவை சந்தை மதிப்பின்படி பெற்றுக் கொள்வதும் வழக்கம். இதை நீண்ட காலமாகவே செய்துவரும் மோகன்ஷானை, இந்து சங்க பொறுப்பாளர் எவரும் அவ்வாறு கேட்பதாகத் தெரியவில்லை. ஆனால், 27-05-2023 நாளிதழ் செய்தியில், இந்து சங்க அச்சுப் பணிகளுக்கு இவர் ஏதோ ரொக்கம் கொடுத்து உதவியதைப் போல சொல்லி இருக்கிறார்.

தவிர, தனக்கு ஊக்கத் தொகை போதாதென்று போக்குவரத்து செலவையும் எதிர்பார்க்கும் மோகன்ஷானைப் போன்றவர்கள் பொது வாழ்க்கைக்கேப் பொறுத்தமில்லாதவர்கள்; தகுதியும் இல்லாதவர்கள்.

அலவன்சும், போக்குவரத்து செலவும் கிடைக்காத நிலையில், இவர் மீண்டும் தலைமைப் பதவிக்கு வரவேண்டிய தேவை என்ன இருக்கிறது?

ஒருவேளை, மீண்டும் இவரின் தலைமைத்துவத்தில்(அவ்வாறு நடந்தால் இந்து சங்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும்) மலேசிய இந்து சங்கம் பெறும் மானியத்தில் ஏதும் பங்கம் நேர்ந்து, குளறுபடி ஏற்பட்டு, விவகாரம் வீதிக்கு வந்தபின், செய்தியாளர்கள் அதைப்பற்றி கேட்டால், “10 பேர் இருக்கும் இடத்தில் தவறு நடக்கத்தான் செய்யும்; அரசாங்க அதிகாரிகள் ஊழல் செய்ய வில்லையா?” என்று கேட்டு பொறுப்பை தட்டிக்கழிப்பார்.

மோகன் ஷான் 13 ஆண்டுகளாக தலைவராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில், இவர் யார் யாருக்கெல்லாம் அலவன்ஸ் கொடுத்தர்? எத்தனைப் பேருக்கு போக்குவரத்து செலவு வழங்கினார் என்ற விவரத்தை மலேசிய இந்து சமுதாயத்துக்கு மோகன் ஷான் தெரிவிக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால் இவருக்குமட்டும் எதற்காக போக்குவரத்து செலவும் ஊக்கத் தொகையும்?

பொறுப்பில் உள்ளவர்களுக்கு படிச்செலவு கொடுக்க, இந்து சங்கம் என்ன வர்த்தக மையமா?

மலேசிய இந்து சங்கம் குறித்து நாமெல்லாம் புரிந்து கொண்டிருப்பது என்னவெனில், இதுவொரு சமய சேவைக்கான தொண்டு அமைப்பு என்பதுதான்.

அலவன்சையும் போக்குவரத்து செலவும் தேவைப்படுவோர்க்கு இந்து சங்கத்தில் என்ன வேலை?

இப்படிப்பட்டவரின் தலைமையின்கீழ்தான் இந்து சங்கம் 13 ஆண்டுகாலம் வண்டியை ஓட்டியுள்ளது

இவை எல்லாவற்றையும் விட, மலேசிய இந்து சங்கத்துக்கு 30 ஆயிர வெள்ளி கொடுத்ததாக சொல்லிக் கொள்ளும் மோகன் ஷான், 13 ஆண்டுகளாக இவர்தான் இந்து சங்கம்; இந்து சங்கம்தான் இவர் என்ற நிலை நிலவிய நிலையில், இவரின் தலைமைத்துவத்தில் இவருக்கு இவரே வெ.30 ஆயிரம் கொடுத்துக் கொண்டாரா என்பது தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, 13 ஆண்டுகளாக, அதற்கும் மேலாக மலேசிய இந்து சங்க தலைமையகக் கட்டடத்தை சத்திரம் போல பயன்படுத்தி உண்டு உறங்கி இருக்கிறார்

இதற்காக இந்து சங்க நிருவாகத்திற்கு வாடகை, தண்ணீர்-மின்சார கட்டணமெல்லாம் மோகன் செலுத்தி இருக்கிறாரா என்ற விவரமும் தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, இவரின் நீண்ட தலைமைத்துவத்தில் மலேசிய இந்து சங்கம் ஏதேனும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்-மறுமலர்ச்சியை எட்டியதா என்பதும் கேள்விக்குறிதான்.

மலேசிய இந்து சங்கத்தை 1965–இல் உருவாக்கிய திரு. பரமானந்தம் முதல் எந்தத் தலைவரும் சங்கத்தில் இருந்து ஊக்கத் தொகைக் கேட்டதில்லை; வழிச்செலவுக்கு பணம் கேட்டதில்லை.

இத்தகைய கேலிக் கூத்தை யெல்லாம் நடத்துவோர் மீண்டும் பொறுப்புக்கு வந்தால் இந்து சங்கம் மிஞ்சுமா என்பதை இன்றைய 46-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் வாக்களிக்கப்போகும் இந்து சங்க உறுப்பினர்கள் கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles