
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், செப்.28:
கல்வி அமைச்சர் ஃபத்லினா சீடெக் கல்வி அமைச்சுக்கு பொறுப்பேற்றிருக்கும் கடந்த ஓராண்டு காலத்தில், முஸ்லிம் அல்லாத மாணவர்கள் இஸ்லாமிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நிகழ்ச்சிகள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார் வருவதாக மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி பொதுச் செயலாளர் பேராசிரியர் சுகுமன் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய புகார்கள் 6-ஆம் படிவ கல்லூரி மற்றும் போலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் தவிர ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடம் இருந்தும் வருகின்றன.
முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கான தன்முனைப்பு உரைகள், இஸ்லாமிய மத பிரச்சாரகர்களால் நடத்தப்படுகின்றன. மேலும், முஸ்லிம் அல்லாத மாணவர்கள் இஸ்லாமிய கலாச்சார உடைகளை அணியும்படி அறிவுறுத்தப் படுவதுடன் இத்தகைய நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மையங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய முன்னெடுப்புகள் மதமாற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்று முஸ்லிம் அல்லாத பெற்றோரும் கல்வியாளர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
மலேசிய மதானி கொள்கையின் 4 மற்றும் 5-ஆவது அம்சங்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை பறைசாற்றுகின்றன. ஆனால், உயர்க் கல்வி மாணவர்களிடையே நிகழும் இத்தகைய முன்னெடுப்புகள் மரியாதை மற்றும நம்பிக்கையை சீர்குலைத்து அவநம்பிக்கையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துவதுடன் பல்லின சமுதாயத்தில் பகைமைப் போக்கையும் உருவாக்கும்.
முஸ்லிம் மாணவர்களிடையே இஸ்லாமியக் கொள்கைகள், போதனைகள் அல்லது கட்டளைகள் குறித்து பிரச்சாரம் செய்யும் அரசத் தரப்பு அல்லது வேறு நிறுவனம் குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை. அது இஸ்லாமிய உள்விவகாரம் என்பதுடன் இந்த சமயத்திற்கு அப்பாற்பட்டவர்களுக்கு இதில் எந்த ஈடுபாடும் இல்லை. இதில், முஸ்லிம் அல்லாத மாணவர்களை ஈடுபடுத்துவதுதான் கவலை அளிக்கிறது.
பக்கத்தான் கூட்டணி எதிரணியாக இருக்கும்பொழுதும் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ஆட்சி அதிகாரத்தை நெருங்கும்பொழுதும் மத நியாயம் மற்றும் சகவாழ்வு குறித்து முழக்கமிடுகிறது. எனவே, வாக்குறுதிகள் வாக்குறுதிகளாகவேத் தொடராமல், அவை கொள்கையிலும் செயலிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சுகுமன் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
