
🔊To listen to this news in Tamil, Please select the text.
காவிரியில் நமக்கு வேண்டிய தண்ணீரை பெறுவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகுந்த ராஜ தந்திரத்தோடு செயல்படுகிறார் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காந்தியடிகள் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை கோதமேடு பகுதியில் தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ முகாம், தூய்மை பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள், அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் எஸ்சி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார், பொது செயலாளர்கள் இல.பாஸ்கரன், தளபதி பாஸ்கர், இலக்கிய அணி தலைவர் புத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: காவிரி பிரச்னையில் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாஜ மட்டும் நாடகம் ஆடி வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக ராஜதந்திரத்தோடு வாய்ப்பேச்சால் பயனில்லை என கருதி, தண்ணீர் வந்தால் போதும் என்று அவர் தெளிவாக இந்த பிரச்னையை கையாளுகிறார்.
கர்நாடகத்தில் தண்ணீரை திறந்து விடும் போது எல்லாம் பிரச்னை செய்வது பாஜ தான். தமிழகத்திற்கு தண்ணீர் வருவதை ஏன் தடுக்கிறீர்கள் என கர்நாடக பாஜவினரைப் பார்த்து வாய்திறந்து கேட்க முடியாதவர் தான் அண்ணாமலை. சீமான் இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசி வருகிறார். இந்தியாவில் கலவரத்தை தூண்டுவதற்காக பேசுகிறார். மாநிலங்கள் இடையே ஒரு இன கலவரத்தை தூண்டுவதற்கு பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காந்தியடிகளின் 155வது பிறந்த தினம், லால் பகதூர் சாஸ்திரியின் 119வது பிறந்த தினம் மற்றும் காமராஜரின் 48வது நினைவு தினம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஹசன் மவுலானா எம்எல்ஏ, பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, பி.வி.தமிழ்ச்செல்வன், மாநில செயலாளர் சுமதி அன்பரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*காவிரி பிரச்னையில் எல்லாம் முறையாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாஜ மட்டும் நாடகம் ஆடி வருகிறது.
