28.4 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

தாப்பா தொகுதி மக்கள் பாக்கியசாலியர் டத்தோ நெல்சன் கேபினெட் அமைச்சரா, துணை அமைச்சரா?

🔊To listen to this news in Tamil, Please select the text.

-நக்கீரன்

கோலாலம்பூர், அக்.04:
மலேசிய இணைய-அச்சு ஊடகங்களுக்கு கடந்த சில நாட்களாக வேட்டையோ வேட்டை! அமைச்சரவை மாற்றம் குறித்த ஊக செய்திகள் சிறகுகள் இன்றியே தலைகீழாகப் பறக்கின்றன.

இத்தகைய செய்திகளில் ஒன்றுமட்டும் உறுதி; மஇகா தலைவர் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற இருப்பதுதான் அந்த உறுதியான ஒன்று. மஇகா கல்விக் குழுத் தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரங்கநாதன் அநேகமாக கேபினெட் அமைச்சராக நியமனம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், அவருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற 4-ஆம் தவணை உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு.சரவணன் மீண்டும் அமைச்சராக இருப்பதாகவும் அதுவும் அவர் கொல்லைப்புற ஆட்சிகளில் வகித்த மனித வளத் துறைக்கே பொறுப்பேற்க இருப்பதாகவும் செய்திகள் அதிகமாக உலா வருகின்றன.

இருந்தபோதும் இதற்கு வாய்ப்பு குறைவுதான் என்று கருதவேண்டியுள்ளது. ஒருவேளை சரவணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால், 16-ஆவது பொதுத் தேர்தலில் தாப்பா தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து துணை அமைச்சர் செனட்டர் சரசுவதி கந்தசாமி மட்டுமல்ல; பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரும் மறந்துவிட வேண்டியதுதான்.

2008 அரசியல் ஆழிப் பேரலையாக இருக்கட்டும்; 2018 அரசியல் மாற்றத்திற்கான தேசிய அலையாக இருக்கட்டும்; 2022 பச்சை அலையாக இருக்கட்டும்; எந்த அலையாக இருந்தாலும் தாப்பாவில் கரை சேர்ந்தவர் சரவணன்.

2022 நவம்பர் 19 பொதுத் தேர்தலில் தாப்பாவில் வான்குடை வேட்பாளராக களமிறக்கப்பட்ட சரசுவதி வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை பிகேஆர் கட்சியினருக்கு, குறிப்பாக அன்வாருக்கு அதிகமாக இருந்தது. ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.

இந்த நிலையில், தோற்ற இடத்தில் மீண்டும் வெற்றியை நிலைநாட்ட சரசுவதி கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். இதற்கு அன்வாரும் பச்சைக் கொடி காட்டி இருப்பதாகத் தெரிகிறது. சரசுவதியின் வழிகாட்டியும் தமிழ்ப் பள்ளி ஆதரவாளருமான ‘கொடைநெஞ்சர்’ ஓம்ஸ் தியாகராஜனும் இந்த முன்னெடுப்பிற்கு பக்கபலமாக இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தன்னைத் தோற்கடித்த சரவணனுக்கு தன்னைவிட உயர்பொறுப்பு வழங்குவதை சரசுவதியும் விரும்பமாட்டார்; சரசுவதியின் விருப்பத்திற்கு மாறாக அன்வாரும் செயல்பட மாட்டார்; ஓம்ஸ் தியாக ராஜனும் இதற்கு அனுமதிக்கமாட்டார்.

தவிர, 15-ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த நவம்பர் 19-ஆம் நாள் நள்ளிரவு வரை தெளிவான முடிவில்லை; அடுத்த பிரதமர் யார் என்று எவராலும் சொல்ல முடியவில்லை. 222 தொகுதிகளுக்குமான முடிவும் வெளிவரவில்லை.

அதற்குள், அடுத்த ஆட்சியை அமைக்க இருப்பது பெரிக்காத்தான் கூட்டணிதான் என்று பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ ஹடி அவாங் அறிவித்தது பலரின் புருவங்களை உயர்த்தியது.

எண்பது தொகுதிகளைக்கூட எட்டாத இந்தக் கூட்டணியால் எப்படி ஆட்சி அமைக்கமுடியும்? இந்த அறிவிப்பிற்கான ஆதாரமும் துணிவும் எந்த இடத்தில் பொதிந்து இருக்கிறது என்ற கேள்விகளுக்கு பின்னர் தெரியவந்தது பாதி விடை.

தேசிய முன்னணியின் 26 உறுப்பினர்களில் 10 பேர், டான்ஸ்ரீ முகைதீன் மீண்டும் பிரதமர் ஆகவும் பெரிக்காத்தான் கூட்டணி ஆட்சி அமையவும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று பாஸ் கட்சி சார்பில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. பெட்டாலிங் ஜெயாவில் நள்ளிரவில் கூடிய பெரிக்காத்தான் கூட்டணி தலைவர் குழாமில், கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியில் சறுக்கியவரும் மலேசிய அரசியலில் தவளை அத்தியாய நாயகனும் டத்தோ சுரைடா கமாருடின், டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா போன்றோரின் அரசியல் பயணத்தை முடித்துவைத்தவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகைதீனுக்கு ஆதரவு தெரிவித்த பத்து பேரில் சரவணனும் ஒருவர் என்று பரவலாக பேசப்பட்டது.

அனைத்தையும் கூட்டிக் கழித்தால், அமைதியான செயல்பாட்டாளரும் கல்வியாளருமான முனைவர் நெல்சன் ரெங்கநாதன் கேபினெட் அமைச்சராக நியமிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

எல்லாவற்றுக்கு மேலாக, அடிமடியில் கைவைப்பதைப் போல சரசுவதியே பதவி நீக்கப்படுவார் என்றும் சிவக்குமாரும் அந்த நிலைக்கு ஆளாவார் என்றும் கசியும் செய்திகள் எந்த அளவுக்கு உண்மையெனத் தெரியவில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்து பிரதமர் அறிவிப்பு செய்யப்படும் அந்த வேளையில்தான் அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இந்த வேளையில், ஓர் அம்சத்தை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. 1984-இல் உருவாக்கப்பட்ட தாப்பா தொகுதி, பேராக் மாநிலம், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் இருக்கிறது. அடுத்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற 1986 பொதுத் தேர்தல் முதல் இதுவரை அந்தத் தொகுதியின் மக்கள் பிரதிநிதி, ஏதோவொரு வகையில் அமைச்சரவைசார் பொறுப்பு வகித்து வருகின்றனர்.

டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன், டான்ஸ்ரீ க.குமரன், டான்ஸ்ரீ சு.வீரசிங்கம், சரவணன் என அனைவரும் மத்தியக் கூட்டாட்சியில் இடம்பெற்றுள்ளனர். இந்த 15-ஆவது நாடாளுமன்றத்தில் வென்றவர் இடம்பெறாவிட்டாலும் அந்தத் தொகுதியில் களம் கண்டவர் துணை அமைச்சராக இருக்கிறார்.

அந்த வகையில் தாப்பா பாரம்பரியத்தை சரசுவதி தற்காத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles