
🔊To listen to this news in Tamil, Please select the text.
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 29:
உலக அரங்கில் மலேசியாவின் பெருமை இன்றளவும் போற்றப்படுவதற்கு முக்கிய காரணம், மலேசிய மக்கள் பாரம்பரியமாக நிலைநாட்டிவரும் சமய சகிப்புத்ன்மையும் சமூக நல்லிணக்கமுமே ஆகும்.
இதைக் கெடுக்கும் வகையில் காலமெல்லாம் ஒவ்வொருவராக முளைத்து வருகின்றனர். அந்த வகையில், இந்துவாகப் பிறந்து இந்துவாக வாழ்ந்து இடையில் மதம் மாறிய சம்ரி விநோத், தொடர்ந்து இந்து சமயத்தைப் பழித்துவருகிறார்.
இந்துப் பெருமக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிவராத்திரி குறிப்பிடத்தக்கது. தென்னாடு உடைய சிவனார்க்கு உரிய ராத்திரியான இந்த சிவராத்திரியின் மகிமையெ பரம்பொருளை முற்றும் முழுதுமாக தொழுது ஒழுகுவதுதான்.

இப்படிப்பட்ட சிவராத்திரியைப் பண்டிகையைக் கொண்டாடி முடித்தபின், இந்து சமய அன்பர்களையும் சிவலிங்கத்தையும் சிறுமைப்படுத்தும் விதமாக, ஸம்ரி வினோத் சிறுமைப் படுத்தி வெளியிட்ட கருத்திற்கு நாடு முழுவதும் உள்ள இந்து சமய அன்பர்கள் பெரும் கொந்தளிப்பு ஆளாகி உள்ளனர்..
இந்து சமயத்தில் முதன்மை ஆன்மிக நெறியான சைவ சமயத்தின் வழிபாட்டு நாயகன் சிவபெருமானின் அருவுருவத் திருவுருவான சிவலிங்கத்தை சிறுமைப் படுத்தியுள்ள மதவெறுப்புப் பிரச்சாரகர் சம்ரி வினோத்திற்கு மலேசிய இந்து சங்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது
சைவ சமயத்தில் உருவ வழிபாடும் அருவ வழிபாடும் உள்ளதைப்போல அருவுருவ வழிபாடும் உள்ளது;. சோதி வணக்க முறைதான் அருவுருவ வழிபாட்டுக்கு தக்க சான்றாகும். அதைப்போல சிவபெருமானின் அருவுருவ வடிவம்தான் சிவலிங்கம்.
சிவலிங்கத்தின் அடித்தளம் உயிர்கள் வாழும் பூமியையும் மேற்பகுதி வானுலகையும் குறிக்கிறது. மொத்தத்தில் மண்ணையும் விண்ணையும் ஆளும் பரம்பொருளான சிவபெருமானின் அருவுருவக் கோலம்தான் சிவலிங்கம் என்னும் திருவுருவம்.

ஒரு மொழியில் எந்தச் சொல்லுக்கும் பல்வேறு பொருட்கள் உள்ளதென்பது அனைவரும் அறிந்தது. இதை அறியாத ஸம்ரி வினோத், சிவலிங்கத்திற்கு சிறுமையான முறையில் விளக்கம் அளித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர் தொடர்ந்து இதுபோன்ற வேலையைச் செய்து இந்துப் பெருமக்களுக்கு இன்னல் விளைவிப்பதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது; அதைப்போல, காவல்துறையும் செயல்படுகிறது.
மலேசியாவின் மாண்புக்கு பெருமை சேர்க்கும் சமய நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வேளையில் தொடர்ந்து ஈடுபடும் வினோத்மீது காவல்துறை இப்பொழுதாவது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பாக, ஒற்றுமை அரசாங்கத்தில், இதுபோன்று ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மடானி அரசு, இனியும் அனுமதிக்காமல் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


