
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர் விவேகானந்தர் ஆசிரமம் நாட்டின் புராதான அடையாளங்களுள் ஒன்றென்னும் வகையில் அது நிலைநிறுத்தப்பட வேண்டுமென்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன். வேதமூர்த்தி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்து சமய மேன்மையை மேலை நாடுகளுக்கு எடுத்துரைத்த இளந்துறவி சுவாமி விவேகானந்தரின் நினைவாக 120 ஆண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் நிறுவப்பட்ட இந்த ஆசிரமத்திற்கும் இந்திய சமுதாயத்திற்கும் ஆன்மிக, கலாச்சார, பண்பாட்டுத் தொடர்பு உள்ளது.

கோலாலம்பூர் வட்டார வரைவுத் திட்டம்-KLLP 2020-2040இல் இந்த வரலாற்று, புராதன அடையாளம் குறிப்பிடப்படவில்லை என்பதும் இந்தச் சின்னத்தை அழித்து அந்த இடத்தில் வர்த்தக நோக்கில் மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதும் வருத்தத்திற்கு உரியது.
30 ஆண்டுகளாகத் தொடரும் இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். இதன் தொடர்பில் ஏற்கெனவே ஹிண்ட்ராஃப் பேரியக்கத்தின் சார்பில், 2014-2016 காலக்கட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.
இந்த இடம் புராதன அடையாளமாக நிலைநிறுத்தப் பட்டுள்ளதாக 2016-இல் அப்போதைய சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் செய்த அறிவிப்பு, 2005 பாரம்பரியச் சின்ன பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின்படி கோலாலம்பூர் விவேகானந்தர் ஆசிரமம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று இன்றைய சுற்றுலா அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்-ற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சரும் ஹிண்ட்ராஃப் தலைவருமான பொன். வேதமூர்த்தி வலியுறுத்தி உள்ளார்.
