
🔊To listen to this news in Tamil, Please select the text.
இந்தோனேசியாவின் ருவாங் எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களான, மலேசியா ஏர்லைன்ஸும், ஏர் ஆசியாவும், கோலாலம்பூர் மற்றும் சபா, சரவாக் மாநிலங்களுக்கு இடையிலான சில விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.
கோலாலம்பூருக்கும், சபாவுக்கும் இடையில், 11 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள வேளை; சரவாக்கிற்கான எட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
நிலைமை தொடர்ந்து மாறி வருகிறது. அவ்விரு மாநிலங்களிலும் காணப்படும் மிக அண்மைய நிலவரங்களை மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்ந்து கண்காணிக்கும். விமான சேவை இரத்து செய்யப்படுவது மீதான தகவல்கள் புதுப்பிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
அதனால், மலேஷியா ஏர்லைன்ஸ் இணையதளத்தில், மை புக்கிங் மூலம் தங்கள் தொடர்பு விவரங்களை புதுப்பித்துக் கொள்வதோடு, மின்னஞ்சல் மற்றும் குறுச்செய்தி மூலம் அவ்வப்போது தகவல்கள் அல்லது அறிவிப்புகளை சரிபார்த்துக் கொள்ளுமாறும் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வேளையில், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான 16 விமான சேவைகளை ஏர் ஆசியா இரத்து செய்துள்ளது. இருக்கைகள் காலியாக இருக்கும் பட்சத்தில், அடுத்த 30 நாட்களில், பயணிகள் தங்கள் பயணத்தை மீண்டும் அட்டவணையிட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ருவாங் எரிமலையில் நேற்று தொடங்கி இதுவரை மும்முறை வெடிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்தேனேசியா, சுலவேசி மாநிலத்தில் வசிக்கும், குறைந்தது 800 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



