
🔊To listen to this news in Tamil, Please select the text.
புத்ராஜெயா, ஏப்.19:
மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன், தேசிய செயலாளர் மாணிக்கவாசகம் கதிரேசன், பொருளாளர் இரா. இராஜேந்திரன், தேசிய துணைச் செயலர் எஸ். அழகேந்திரன் ஆகியோர் ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் மாண்புமிகு க.சரஸ்வதியை நேற்று ஏப்ரல் 18-ஆம் நாள் புத்ராஜெயாவில் உள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்தனர்.
மலேசிய இந்து சங்கம் மட்டுமல்ல; இந்து சமயமும் மலேசியவாழ் இந்துப் பெருமக்களும் எதிர்கொள்ளும் பல்வேறு சங்கடங்கள், வழிபாட்டு தலங்களின் நீண்ட கால சிக்கல் உட்பட பல்வேறு பிரச்சினை குறித்து துணை அமைச்சருடன் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் மலேசிய இந்து சங்க மறுமலர்ச்சி குறித்து சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் இந்து சங்க தேசியத் தலைவர் தங்க கணேசன் தெரிவித்தார்.
நாடு விடுதலை அடைவதற்குமுன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மலாயா விரைவில் மெர்டேக்கா பெற வேண்டும்; நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்றும் தோட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் அர்ச்சனை-ஆராதனைகள் இடம்பெற்றன. அப்பொழுதெல்லாம் வழிபாட்டு தலங்கள் எந்தச் சிக்கலையும் எதிர்கொள்ள வில்லை. தோட்ட நிர்வாகங்களின் முழு அனுமதி-ஒத்துழைப்புடன் ஆலயங்கள் இயங்கின.
ஆனால், மெர்டேக்கா பேச்சு தொடங்கிய காலத்தில் தோட்ட நிர்வாகங்கள் மாறத் தொடங்கின. தோட்டங்களும் துண்டாடப்பட்டன. இதன் விளைவாக புதிய நிருவாகங்கள் பெரும்பாலான தோட்டங்களுக்கு பொறுப்பேற்றன.
ஆலயங்களின் இருப்பிற்கும் நடைமுறைக்கும் பழைய நிருவாகங்களால் வழங்கப்பட்டிருந்த அனுமதி-முழு ஒப்புதலை கருத்தில் கொள்ள புதிய நிருவாகங்கள் தவறிவிட்டன.
மெர்டேக்காவிற்குப் பின்னர் அடுத்தடுத்த அமைந்த மத்திய மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டியதால், நூற்றுக் கணக்கான ஆலயங்கள் இட சிக்கலை இன்னமும் எதிர்கொண்டுள்ளன.
இதன் விளைவாக, நகராட்சி மற்றும் மாவட்ட மன்றங்கள் தற்பொழுது திடீர்-திடீரென ‘நோட்டீஸ்’ அனுப்பி ஆலயங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றன. காலங்காலமாக இந்து மக்களுக்கு வழிபாட்டு மையங்களாக விளங்கும் இத்தகைய ஆலயங்கள் தடுமாறி, தத்தளிப்பிற்கு ஆளாகுகின்றன.
இந்தச் சிக்கலுக்கு அரச மட்டத்தில் பேசி தீர்க்கமான முடிவெடுக்க துணை நல்கும்படி துணை அமைச்சரின் உதவி நாடப்பட்டது.
தவிர, ஏறக்குறைய 160 வழிபாட்டு தலங்கள் திவால் நிலைக்கு ஆளாகியுள்ளதும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப் பட்டதுடன் அவற்றின் மீட்சிக்கு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டதுடன் இதன் தொடர்பில் ஒற்றுமை அமைச்சகத்தின் சார்பில் உதவும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதேவேளை, இந்த விவகாரங்கள் குறித்து மலேசிய இந்து சங்கம் பிரதமரின் கவனத்திற்கும் உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கும் கொண்டு செல்வது குறித்தும் துணை அமைச்சர் செனட்டர் க.சரஸ்வதியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

சிறைவாசம் அனுபவிக்கின்ற இந்து சமயத்தினருக்கு சமயத் தெளிவுடன் ஆன்மிக நன்னெறி, வாழ்வில் நம்பிக்கை உள்ளிட்ட அம்சங்களை உட்படுத்தி கால அட்டவணைப்படி சிறை வளாகத்தில் இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் வகுப்புகள் நடைபெறுகின்றன. தவிர, பண்டிகை மற்றும் சமய விழாக் காலங்களில் சிறப்பு வழிபாட்டுடன் ஆன்மிக நன்னெறி வகுப்பு நடத்தி விருந்தோம்பலும் செய்கின்ற பணியில் மலேசிய இந்து சங்கம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
இத்தகைய சமய-சமூகப் பணியில் தொய்வில்லாமல் ஈடுபடும் சமய ஆசிரியர்களுக்கு சொற்ப அளவில் ஊக்கத்தொகை, பயணச் செலவு ஆகியவற்றை ஆண்டு முழுவதும் வழங்கும் இந்து சங்கம் நிதிச் சுமையை எதிர்கொள்வதும் துணை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இல்வாழ்வில் இணையவிருக்கும் புதிய இணையருக்காக திருமண ஆயத்தப் பயிற்சியையும் இந்து சங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, மற்ற சமயத்தினர் இந்து சமயம் குறித்து அடிக்கடி இழிவாகப் பேசி வருவதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் துணை அமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டது.
இந்துப் பெருமக்களின் சமய-சமூக மறுமலர்ச்சிக்காக தொடர்ந்து பாடாற்றிவரும் இந்து சங்கமும் மறுமலர்ச்சி அடையவேண்டியது அவசியம் என்பதால், ஒற்றுமை அமைச்சகத்தின் சார்பில் நிதி உதவி அளிக்கவும் துணை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கபட்டது;
அத்துடன் இந்திய சமூக-பொருளாதார உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் நிதி வழங்கும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அனைத்தையும் பரிசீலித்து ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஏரோனுடன் ஆலோசித்து ஒரு நல்ல முடிவை அறிவிப்பதாக துணை அமைச்சர் செனட்டர் க.சரஸ்வதி தெரிவித்தார் என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் தெரிவித்தார்.



