
1950-களிலிருந்து தொடர்ந்து வாக்களித்து வரும் 90 வயதான மூத்த வாக்காளர் தாம் ஆ ஹ்வா, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்தான் தாம் கண்ட பிரதமர்களில் மிகவும் நேர்மையானவர் என்று பாராட்டியுள்ளார்.
ஜொகூரின் புதேரி வாங்க்சா சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரு காப்பிக்கடையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இளம் வயதிலிருந்தே மசீச (MCA) கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தபோதிலும், அன்வார் குறித்து தாம் தெரிவிக்கும் கருத்து அரசியல் சார்ந்ததல்ல என்றும், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் அரசியல் வளர்ச்சியை நேரில் பார்த்த அனுபவத்தின் அடிப்படையிலேயே அந்த மதிப்பீட்டை வழங்குவதாகவும் கூறினார்.
“அன்வார் நேர்மையான பாதையில் நடப்பவர். அவர் மலாய், சீனர், இந்தியர் என்று வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்துகிறார். அதனால்தான் அவர் மிகவும் நேர்மையான தலைவர் என்று நான் கூறுகிறேன்,” என்றார்.
தினமும் செய்தித்தாள்களை வாசித்து நாட்டின் அரசியல் நிலவரங்களை தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்த அவர், மலேசியாவின் ஒவ்வொரு பிரதமரும் தங்கள் காலகட்டத்திற்கேற்ப நாட்டிற்கு தனித்துவமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானை நினைவுகூர்ந்த அவர், “துங்கு மிகவும் எளிமையானவர். நாட்டின் சுதந்திரத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடுபட்டார்,” என்றார். அதேபோல், இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தவர் என்றும், மூன்றாவது பிரதமர் துன் ஹுசைன் ஒன் உறுதியான தலைமைத்துவம் கொண்டவர் என்றும் பாராட்டினார்.
“ஒரு தலைவரை மதிப்பிடும்போது வதந்திகளையோ குற்றச்சாட்டுகளையோ நம்பாமல், அவர் மக்களுக்காக என்ன செய்துள்ளார் என்பதைப் பார்க்க வேண்டும். மக்களுக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் ஜொகூரில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் அவர் பாராட்டினார். “முன்பு கிராமங்களாக இருந்த பல பகுதிகள் இன்று நவீன நகரங்களாக மாறியுள்ளன. இந்த வளர்ச்சி அடுத்த தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும்,” என்றார்.
90 வயதை எட்டியிருந்தாலும், வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் தாம் தவறாமல் வாக்களிக்கச் செல்வேன் என்றும், ஒவ்வொரு வாக்கும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தாம் ஆ ஹ்வா தெரிவித்தார்.



