
சிலாங்கூரில் இந்து ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குப் பேச்சுவார்த்தை மற்றும் இணக்கமான தீர்வுகளை முன்னெடுத்து வரும் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசுக்கு என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் நன்றி தெரிவித்தார்.
சில ஆலயங்கள் தங்களுக்குச் சொந்தமில்லாத நிலங்களில் அமைந்துள்ளன என்ற உண்மையை மறுக்க முடியாது. ஆனால், அவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
சில ஆலயங்கள் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதிகளில் இருப்பதாகவும், அவை உருவாக்கப்பட்ட காலத்தில் அந்தப் பகுதிகள் தோட்டங்களாக அல்லது விவசாய நிலங்களாக இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பின்னர் அந்த நிலங்கள் குடியிருப்பு அல்லது வர்த்தக மேம்பாட்டுப் பகுதிகளாக மாறியதால், பல ஆண்டுகளாக இருந்த வழிபாட்டுத் தலங்களை உடனடியாக ‘சட்டவிரோதமானவை’ என்று முத்திரை குத்துவது சரியான அணுகுமுறை அல்ல என்று அவர் தெரிவித்தார்.
நிலப் பிரச்சினை இருந்தால் நிலம் தொடர்பான தீர்வையும், திட்டமிடல் பிரச்சினை இருந்தால் திட்டமிடல் வழியான தீர்வையும், கட்டடப் பாதுகாப்பு பிரச்சினை இருந்தால் சம்பந்தப்பட்ட அமைப்புகள் மூலமான தீர்வையும் காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“மதமும் வழிபாட்டுத் தலங்களும் மக்களைப் பிரிக்கும் ஆயுதமாக மாறக்கூடாது”
“கோவில், பள்ளிவாசல், தேவாலயம் அல்லது சீன ஆலயம் எதுவாக இருந்தாலும், அவற்றை மக்களைப் பிரிக்கும் அரசியல் கருவியாகப் பயன்படுத்தக்கூடாது,” என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.
மலாய், சீனர், இந்தியர் என அனைவரும் ஒரே மலேசியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மதம், மொழி, கலாசாரம் வேறுபட்டாலும் பரஸ்பர மரியாதையே மலேசியாவின் தனித்துவமும் வலிமையும் என்று அவர் கூறினார்.
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், நில உரிமையாளர்கள், மேம்பாட்டாளர்கள் மற்றும் வழிபாட்டுத் தல நிர்வாகங்கள் இணைந்து செயல்படும் மேலும் முறையான பேச்சுவார்த்தை மற்றும் தீர்வு காணும் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“நாம் ஒரே மாதிரியாக இருப்பதால் ஒன்றுபட்டவர்கள் அல்ல; வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரையொருவர் மதிப்பதால்தான் ஒன்றுபட்டிருக்கிறோம். சிலாங்கூர் தொடர்ந்து முன்னேறிய, அனைவரையும் உள்ளடக்கிய, நல்லிணக்கம் நிறைந்த மாநிலமாக இருக்க வேண்டும்,” என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
தனது உரையின் இறுதியில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நட்பை வலியுறுத்தும் வகையில் YB அஸ்மின் அலியை தனது நீண்டகால நண்பராகக் குறிப்பிட்ட குணராஜ், அவருக்காக மலாய் மொழியில் கவிதை ஒன்றையும் வாசித்து தனது உரையை நிறைவு செய்தார்.



