25.3 C
Kuala Lumpur
Thursday, April 16, 2026

Vetri

இந்து சங்கம் என்ன செய்கிறது? -‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் பினாங்கில் முழக்கம்!

🔊To listen to this news in Tamil, Please select the text.

மலேசிய இந்து சங்கம், சமயம்-சமூகம் சார்ந்து இடையறாது அரும்பணிகளை ஆற்றிவரும் வேளையில், ஒரு சிலர் இந்து சங்கம் என்ன செய்கிறது? இந்து சங்கம் என்ன செய்கிறது என்று கேட்கின்றனர். அப்படிப்பட்டவர்களை மறுதலிக்கவோ அல்லது புறக்கணிக்கவோ இந்து சங்கம் விரும்பவில்லை. மலேசியவாழ் இந்துப் பெருமக்கள் நலம் கருதி நாம் ஆற்றிவரும் பணிகளை அறியாதவர்களும் இருப்பார்கள் என்பதால், அப்படிப்பட்டவர்களுக்காக குறுகிய காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாம் ஆற்றிவரும் பணிகளை குறிப்பிட வேண்டி இருப்பதாக பினாங்கு மாநிலப் பேரவையின் 47-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியபோது சங்கத்தின் தேசியத் தலைவர் ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் தெரிவித்தார்.

முன்னதாக, தேசியப் பேரவையின் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் துணை நிற்கும் பினாங்கு மாநிலப் பேரவையை தற்பொழுது வழிநடத்தும் செயல்செம்மல் திரு. ‘விவேகரத்னா’ தருமனையும் அவரின் தலைமையிலான குழுவினரையும் வெகுவாகப் பாராட்டினார்.

மக்களின் வழிபாட்டிற்கு துணை நல்க அர்ச்சகர் பயிற்சி, தேசிய அளவில் இரத்த தான முகாம்கள், தேசிய திருமுறை விழாவிற்கான நடுவர் பயிற்சி, நவராத்திரி பாமாலை கையடக்க நூல் விநியோகம், இந்து சமய பாடத்திட்ட நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டது, விவேகானந்தர் வீர இளைஞர் சுற்றறிக்கை 10ஆயிரம் அச்சடிக்கப்பட்டு அவற்றை இடைநிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட பலதரப்பினருக்கும் விநியோகம் செய்தது, தமிழ்ப் புத்தாண்டு காணொளிப் போட்டி, தீபாவளி உபசரிப்பு, நவராத்திரி பாமாலை குறுநூல் வெளியீடு, தமிழ் நாடு-கோவை உலகத் தமிழ் மாநாட்டில் உரை நிகழ்த்தியது, 2024 சமய ஆசிரியர் பயிற்சி, இளம் மாணவர்களுக்கு சமய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ‘திருச்சிற்றம்பல’ பயிற்சி முகாம்கள், திருக்குறள் நூல் வெளியீடு, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டி, பிற இயக்கங்களுடன் இணைந்து நடத்திய ‘இந்து நீ மகத்தானவன்’ நிகழ்ச்சி, சமூக மேம்பாடு கருதி நடத்தப்பட்ட திருமண ஆயத்த பயிற்சி, தேசிய திருமுறைக் குழுவினர் நடத்தும் வாராந்திர நடுவர் பயிற்சி, இணையவழி நடத்தப்படும் மாதாந்திர சமய சொற்பொழிவு, இளைய சமூகத்திற்கான செயல்திறன் குறியீட்டைப் பராமரிக்கும் ‘KPI’ (Keep Performance Index) பயிற்சி, இந்து சமயத்தை சிறுமைப்படுத்திய சம்ரி வினோத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை, அவர்மீது மத்தியக் கூட்டரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புத்ரா ஜெயா தேசிய சட்டத்துறை அலுவலகத்திற்குமுன் அமைதி மறியலுடன் மகஜர் வழங்கியது, எண் கணித பஞ்சாங்கம்-வாக்கிய பஞ்சாங்கம் என இரு பஞ்சாங்கங்களைப் பயன்படுத்து-வதால் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் ஏற்படும் நேர வேறுபாட்டை சரிசெய்து உறுதிப்படுத்தும் கடப்பாடு என்றெல்லாம் நாள் தவறாமல் ஓடி ஓடி சேவை ஆற்ற வேண்டியிருக்கிறது.

இத்தகைய பணிகள் யாவும் மாநில மற்றும் வட்டாரப் பேரவைகளின் ஒத்துழைப்பு இல்லை என்றால், தேசியப் பேரவையால் இந்த அளவிற்கு செயல்பட முடியாது .

அந்த வகையில், பினாங்கு மாநிலப் பேரவையின் செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கது என்றார் கணேசன் தங்கவேலு.

தேசியப் பேரவை சார்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலை, மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் கொண்டு சேர்த்த பினாங்கு மாநிலப் பேரவையினர், சமயப் பணியுடன் சமூகத் தொண்டையும் ஒருசேர மேற்கொள்கின்றனர். தவிர, சமய ஆசிரியர்-திருமுறை நடுவர் பயிற்சி, தைப் பூசத் திருவிழா தொடர்பிலான வழிகாட்டிக் குறிப்பேடு வெளியீடு, தொடர் இரத்த தான முகாம்கள், பினாங்குவாழ் இந்துப் பெருமக்களிடையே சமய-ஆன்மிக நன்னெறிசார் நடவடிக்கைகளை ஊக்குவிக்க ‘ஆலயம் செல்வோம்’ என்னும் நிகழ்ச்சியை மாநிலத்தில் உள்ள 12 வாட்டாரப் பேரவைகளின்வழி ஒருங்கிணைத்தல் என்றெல்லாம் தொடர்ந்து சமய-சமூக நிகழ்ச்சிகளை நடத்திவரும் இந்தப் பேரவையினர் நிதி திரட்டுவதற்காக விருந்து நிகழ்ச்சிமூலம் ஒரு இலட்ச வெள்ளியைத் திரட்டி சாதனைப் புரிந்துள்ளனர். இதற்கேற்ப பொருத்தமான மாநில தலைமை தருமன் ஆனந்தன் தலைமையில் அமைந்துள்ளது சிறப்பு என்று தங்க கணேசன் மேலும் பேசினார்.

முன்னதாக தலைமையுரை ஆற்றிய ஆ.தருமன், பினாங்கு மாநில முதல்வரின் பிரதிநிதி டத்தோஸ்ரீ ராஜு, இந்து சங்க தேசியத் தலைவர் தங்க கணேசன், துணைத் தலைவர் கணேஷ் பாபு, தேசிய செயலாளர் க.மாணிக்கவாசகம், பொருளாளர் இரா.இராஜேந்திரன், மத்திய செயலவை உறுப்பினரும் பினாங்கு மாநில துணைத் தலைவருமான முனியாண்டி உள்ளிட்ட அனைவருக்கும் பினாங்கு இந்து சங்கத்தின் சார்பில் வரவேற்பும் நன்றியும் தெரிவித்தார்.

தேசியப் பேரவை அங்கீகாரத்துடன் எழுவருக்கு தொண்டர்மாமணி, தொண்டர்மணி, விவேகரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 4 மாதங்களாக இடைக்காலத் தலைவராக செயல்படும் அதேவேளை பினாங்கு மாநிலப் பேரவையின் நிதி நிலையை சீர்செய்து செம்மைப் படுத்தியுள்ளதாகவும் மாநில இந்து அறப்பணி வாரியம், மாநில தலைமை ஆசிரியர் மன்றம், சமய ஆலோசனை மன்றம் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் மது இல்லாத தைப்பூச விழாவிற்கு பாடுபட்டதாகவும் குறிப்பிட்ட ஆ.தருமன், திருக்குறள் நூல் விற்பனைவழி ஏழாயிர வெள்ளியைத் திரட்டியதாகவும் தெரிவித்தார்.

பினாங்கு இந்து சங்க உறுப்பினர்கள் 210 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், ஆலயங்கள் சமூக மையாங்களாக உருமாற வேண்டும் என்னும் இந்து சங்கத்தின் சீரிய சிந்தனைக்கு ஏற்ப உருமாற்றம் கண்டுவரும் 15 ஆலயங்களின் பொறுப்பாளர்கள் இந்த விழாவில் சிறப்பிக்கப்பட்டதாகவும் ஆ. தருமன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles