
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், ஏப்.28:
இனங்களுக்கு இடையே பிரிவினை பேசி விரோதத்தை வளர்க்கும் தலைவர்கள், தங்களுக்குத் தாங்களே பயனடைகின்றனர்; தவிர, மேல்தட்டு மக்களாகிய இவர்கள், வாக்குகளைப் பெறுவதுடன் செல்வத்தையும் குவிக்கின்றனர். கடைசியில் பொதுமக்கள்தான் துயரத்துக்கு மேல் துயரத்தை அனுபவிக்கின்றனர் என்று பிரதமர் பேசி இருக்கிறார்.
இனவாதம் அகற்றப்பட வேண்டும்; அத்துடன் நாடு வெற்றிபெறவும் வலிமைபெறவும் மலேசியாவின் மாண்பு காக்கப்பட வேண்டும் என பிரதமர் மேலும் வலியுறுத்தி உள்ளார்.
பிரதமரின் இந்தக் கருத்தை பெரும்பாலான மலேசியர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தேசியத் தலைவர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன அடிப்படையில் நாடு பயணிக்கக் கூடாதென்று சுமார் 20 ஆண்டுகளாக நம் பிரதமர் வலியுறுத்தி வருகிறார்.
இருந்தபோதும், நாட்டின் நடைமுறையே இனவாதத்தில் மூழ்கிக் கிடக்கிறதென்றும் மலேசியர்களாகிய நாம் மறுதலிக்கப்பட்ட நிலையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்றும் ஹிண்ட்ராப் இயக்கத் தலைவருமான பொன். வேதமூர்த்தி தெளிவுபடுத்தி உள்ளார்.
சிவில் சேவை, அரசாங்கத் துறைகளில் பதவி உயர்வு, காவல் துறை மற்றும் இராணுவம், பொது பல்கலைக்கழகங்களில் உயர்க் கல்வி வாய்ப்பு,
கல்வி உதவி நிதி, பொருளாதாரத் திட்டங்கள் உள்ளிட்ட யாவும் இன அடிப்படையில்தான் வகுக்கப்படுகின்றன; வழங்கப்படுகின்றன.
அரசியல் சாசனம் 153ஆவது பிரிவின்படி மெர்டேக்கா காலத்தில் இருந்து நலிந்த மலாய் மக்களுக்காக இட ஒதுக்கீடும் சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படுவது உண்மையானால், பிரதமர் குறிப்பிட்டுள்ள அந்த சந்தர்ப்பவாத தலைவர்கள், அதே 153ஆவது பிரிவின் இரண்டாவது துணை விதியை வசதியாக மறந்துவிட்டனர்.

அரசாங்கத்தின் முன்னெடுப்புகள், மலாய் அல்லாத மக்களின் உரிமையை மீறக்கூடாதென்றும் பாரபட்சமாக இருக்கக் கூடாதென்றும் அந்தத் துணைவிதி தெளிவாக சுட்டிக் காட்டுகிறது.
இனவாதமும் பாரபட்சமும் ஊறிவிட்டதாக மலாய் அல்லாத மக்கள் கருதுவதால்தான், பல்துறைசார் வல்லுநர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளை நாடுகின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக, அரசியல் சாசனவிதி 153 பற்றிய எந்தவொரு அறிவுசார் அல்லது முற்போக்கான விவாதம் இந்த நாட்டில் பெரும்பான்மை மக்களுக்கு சவாலாகவே பார்க்கப்படுகிறது.
இதை எல்லாம் மறைப்பதற்காகவே, பிரதமரால் குறிப்பிடப்படும் அந்த சந்தர்ப்பவாத தலைவர்கள் மலேசியர்களின் அமைதியான சகவாழ்வை அச்சுறுத்தும் வகையில் கடுமையான வாதங்களை அடிக்கடி மேற்கொள்கின்றனர்.
எனவே, நீண்ட காலமாக நியாயத்தைப் பேசிவரும் அன்வார் இப்ராகிமைப் போன்ற தலைவர்கள், இந்தப் பிரச்சினையை சரியான தளத்திற்கு கொண்டு செல்வதுடன் அரசியல் சட்ட விதி 153-இன் அமலாக்கம் குறித்தும் அதன் புரிதல் குறித்தும் தெளிவு ஏற்படுவதற்கு ஏதுவாக வெளிப்படையான உரையாடல்கள் மற்றும் விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்பதுடன் அவர்களின் சம வாய்ப்பிற்காக திட்டங்கள் உருவாக்கவும் சட்டங்கள் இயற்றவும் இன்றைய மலேசிய தேசிய அரசியலில் ஒரு வலிமையான மலாய் முஸ்லிம் தலைவர் தோன்ற வேண்டும்.

அத்தகைய தலைவராக பிரதமர் அன்வார் இப்ராகிம் மலர வேண்டும் என்று முன்னாள் அமைச்சருமான பொன். வேதமூர்த்தி விருப்பம் தெரிவித்துள்ளார்.
நீதிக்காக 1998 முதல் குருஷேத்திரப் போர் நடத்திவரும் அன்வார், இதை அச்சமின்றியும் பக்கசார்பின்றியும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அவ்வாறு செல்லும்பொழுது மாற்றுக் குரல்கள் ஒலிக்கலாம்; அவை எல்லை மீறவும் கூடும். ஆனால், நீண்ட கால தவறையும் அரசியல் சாசனத்திற்கு புறம்பானதையும் சீர்செய்யத் துணிந்த உன்னத தலைவராக அன்வாரைக் காண்பார்கள் மலேசியர்கள்.
நலிந்த மலாய் மக்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அதேவேளை, சிறுபான்மை மக்களின் தேவைகளையும் ஒருசேர நிறைவேற்ற ஒரு வலிமையான தலைமைத்துவத்தால் மட்டுமே முடியும். அத்தகைய தலைமை, ஒரு சிலரின் மருட்டலுக்கு இடங்கொடுக்காத தலைமையாக இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் போர்னியோ மாநிலங்களின் ஆதரவு, அம்னோ ஆதரவை யெல்லாம் பெற்றிருக்கும் பிரதமர் அன்வார் இத்தகைய முன்னெடுப்பை மேற்கொண்டால், அவர் நாட்டு மக்கள் பெரும்பாலோரின் ஆதரவை நிச்சயம் பெறுவார் என்று ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சருமான பொன். வேதமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
