‘காகிதப் புரட்சி’ நூல் வெளியீட்டு விழா
வானவீதியிலும் ஒருசேர வலம் வருகிறது, இன்று மாலை!

🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன் 15:
நூலாசிரியரா, நூல் வெளியீட்டாளரா, இலக்கியப் பேச்சாளரா, சமூக அமைப்பின் தலைவரா, கல்வி மறுமலர்ச்சியாளரா, பொதுவுடைமை சிந்தனை-யாளரா என்றெல்லாம் தனித்து அடையாளம் காண முடியாதவராகவும் இவை அனைத்தும் இணைந்தவராகவும் திகழும் ஸ்டாலின் த.குணசேகரன் அவர்களின் ‘காகிதப் புரட்சி’ என்னும் நூல் இன்று மாலையில் சென்னையில் வெளியீடு காண்கிறது.
இணைய சேவை இணைந்த கையடக்க தொலைபேசியை கைக்கொள்ளாத மனிதர்கள், அரை மனிதர்கள் என்றாகிவிட்ட இற்றைப் புதுமை உலகில், புத்தக வாசிப்பிலும் நேசம் கொள்ளும்படி இலட்சக் கணக்கான தமிழர்தம் நெஞ்சம்-தனை ஈரோட்டுப் புத்தகத் திருவிழாக்களின் மூலம் உசிப்பிவிட்டவர் ஸ்டாலின் த. குணசேகரன்.
பொதுவுடைமைப் பார்வை கொண்டவர் குணசேகரன்; அதனால் இவரின் பெயரோடு, பொதுவுடைமைக் கொள்கையின் புரட்சி மையமாம் ஜோசஃப் ஸ்டாலினின் பெயரும் சேர்ந்து ‘ஸ்டாலின் குணசேகரன்’ என்று அறியப்-படுகிறார். இவர், தமிழ் நாட்டின் இலக்கிய ஆளுமையருள் ஒருவருமாகத் திகழ்கின்றார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆகஸ்ட் திங்களில் ஈரோட்டு மாநகரில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாக்கள், தமிழ் நாட்டு எல்லையைக் கடந்து பன்னாட்டளவில் புகழ்பெற்றவை. தமிழீழம், மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட மேலை நாடுகளின் தமிழிலக்கியப் படைப்புகள் எல்லாம் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுவது இன்னும் சிறப்பு.
கனடிய பருவ-இணைய இதழான உதயனின் ஆசிரியர் நாகமணி லோகேந்திர லிங்கனின் படைப்புகள், மலேசிய இலக்கியவாணர் சந்திரகாந்தம், பத்திரிகையாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோரின் படைப்புகளும் ஈரோட்டு புத்தகக் கண்காட்சியின் பன்னாட்டு அரங்கில் காட்சிப்படுத்தப்படும். ஒன்றறை வாரங்களுக்கு நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழா காலக் கட்டத்தில் ஈரோட்டு நகர் முழுவதும் இலக்கிய சாயல் பிரதிபலிக்கும்.
ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழா அரங்கில் தமிழிலக்கிய மழை பொழியும்; புத்தகத் திருவிழாவிற்காக ஒரு கூட்டம் என்றால், மாலை வேளை இலக்கிய உரையைக் கேட்க இன்னொரு கூட்டம் அணிதிரளும்.
அவ்வாறான இலக்கிய மேடைகளில் இலக்கியவாணர்களின் உரைப்பொழிவு இடம்பெறுவதற்குமுன், ஸ்டாலின் த. குணசேகரனின் அறிமுக உரை அவசியம் இடம்பெறும். பெயருக்குத்தான் அறிமுக உரை; ஆனால் அதுவும் ஓர் இலக்கியப் பேருரையாக இருக்கும். ஈரோட்டை மையமாகக் கொண்ட மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான இந்தத் தமிழ்ச்சேகரனாரின் உரைகள் தொகுக்கப்பட்ட நூற்பெட்டகம்தான் இக்’காகிதப் புரட்சி’.
மக்கள் சிந்தனைப் பேரவையின் சென்னைக் கிளை சார்பில் இன்று ஜூன் 15, காரிக்கிழமை மாலையில் நடைபெறும் காகிதப் புரட்சி வெளியீட்டு விழாவில் இலக்கிய ஆர்வலர்களின் மனதை நீவிவிடும் கருத்துரைகள் இடம்பெற இருக்கின்றன.
இவர் என்ன நிருவாகியா, இலக்கியவாதியா, சமூகவாதியா, அரசியல் ஆய்ஞரா, தமிழ் விற்பன்னரா, திரைப்பட நடிகரா என எவ்வகையாலும் பகுக்க முடியாத பன்முக மேதையும் மேநாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கோ. பாலச்சந்திரன், பாவலர் கே.ஜீவபாரதி, திரை நட்சத்திரமும் கோடம்பாக்கத்து தமிழ்ப் பிம்பமுமான பொன்.வண்ணன், இன்னொரு நடிகர் ஜோ.மல்லூரி, க. சந்தானம் போன்றோர் உரை நிகழ்த்தும் இந்த நிகழ்வை, நேரில் காணும் வாய்ப்பு வாய்க்காதோர் அந்த நிகழ்வை அதே நேரத்தில் நேரடியாக @makkalsinthanaiperavai என்னும் YouTube சேனலிலும் makkalsinthanaiperavaierode என்கிற Facebook பக்கத்திலும் பார்க்கலாம்; கேட்கலாம்; மகிழலாம். உடனே அணியமாகுங்கள்.
