24.7 C
Kuala Lumpur
Wednesday, July 22, 2026

Vetri

வங்க தேசத்தில் இந்துக்களுக்கு தொடர் பாதிப்பு: எம்ஏபி சார்பில் மெழுகுவர்த்தி சுடரேந்தி ஆதரவு அணிதிரள்வு!

🔥 Views : 23
👁 Reading Now : 51

🔊To listen to this news in Tamil, Please select the text.

வங்காள தேசத்தில் அரசியல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுபான்மை இந்து மக்கள்மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலேசியத் தலைநகரம் கோலாலம்பூரில் மெழுகுவர்த்தி சுடரேந்தி ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி மற்றும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் முச்சந்திப்பில் நடைபெற்றது.

எம்ஏபி தேசியத் தலைவரும் ஹிண்ட்ராப் தலைவருமான பொன்.வேதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலேசிய இந்து சங்கம், மலேசியாவைத் தளமாகக் கொண்ட பன்னாட்டு மனித உரிமைக் கூட்டமைப்பு, மலேசிய இந்து தர்ம மாமன்றம் உள்ளிட்ட அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள், சிறார்-பெண்கள், உள்ளிட்ட பொதுமக்களுடன் எம்ஏபி உறுப்பினர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்திச் சுடரேந்தி பாதிக்கப்பட்ட வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்தச் சங்கமத்தில் உரையாற்றிய பொன்.வேதமூர்த்தி, உலகம் முழுவதும் சிறுபான்மை மக்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

அந்த வகையில், தற்போது கலவர பூமியாக மாறியுள்ள வங்கதேசத்திலும் உள்ள சிறுபான்மை மக்களான இந்துக்களை தேவையில்லாமல் கலவரக்காரர்கள் குறிவைக்கின்றனர்.
90% முஸ்லிம்கள் வசிக்கும் அந்த நாட்டில், சிறுபான்மை மக்களான இந்துக்கள் அண்மையில் பதவி துறந்து வேற்று நாட்டில் அடைக்கலம் நாடியுள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு அவர்களின் வீடு, கடைகள் தாக்கப்பட்டு விலையுயர்ந்த பொருட்கள், தங்க ஆபரணங்கள் எல்லாம் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
அத்துடன், இந்துக்கள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களையும்கவர்ந்து செல்கின்றனர்.

வங்க தேச தலைநகரம் டாக்காவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள நெட்ரோகோனா மாவட்டத்தில் இத்தகைய காட்சிகள் வெளிப்படையாக அரங்கேறுகின்றன.

பாலஸ்தீனத்தில் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கும் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், வங்காள தேசத்தில் பாதிக்கப்படும் இந்து மக்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும் என்று பொன்.வேதமூர்த்தி இக்கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து, எம்ஏபி சட்ட ஆலோசகரும் மனித உரிமை வழக்கறிஞருமான கார்த்திகேசன் சண்முகம், எம்ஏபி தலைவர்களில் ஒருவரான சி. மணிமாறன், இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன், பன்னாட்டு மனித உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் சசிகுமார், இந்து தர்ம மாமன்றத்தைச் சேர்ந்த விசு உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, முக்கியமான போக்குவரத்து சந்திப்பில் நடைபெற்றதால் வர்த்தக மையமான லிட்டல் இந்தியா பகுதிக்கு வந்த பொதுமக்கள் ஆயிரக் கணக்கானோர் இதைக் கண்டும் அவதானித்தும் சென்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles