
உலக செஸ் சாம்பியன்ஷிப் வென்ற இளம் வீரர் என சாதனை படைத்தார் குகேஷ். கடைசி சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தினார். சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் கோப்பை வென்ற உலகின் ‘நம்பர்–5’ இந்தியாவின் குகேஷ் 18, ‘நடப்பு உலக சாம்பியனும்’, உலகின் ‘நம்பர்–15’ சீனாவின் டிங் லிரென் 32, விளையாடினர். மொத்தம் 14 சுற்று கொண்ட இதில், சுற்று முடிவில் இருவரும் தலா 6.5 புள்ளி பெற்று, சம நிலையில் இருந்தனர்.
கடைசி, 14வது சுற்று இன்று நடந்தது. இதில் வெல்லும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது. இம்முறை குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டியின் 50 வது நகர்த்தலின் போது, ‘டிரா’ நோக்கிச் சென்றது போல இருந்தது. ஆனால் குகேஷ் வெற்றிக்காக போராடினார். 55வது நகர்த்தலில் லிரென், தனது யானையை தவறான இடத்தில் நகர்த்தி பெரிய தவறு செய்தார். வாய்ப்பை துல்லியமாக பயன்படுத்திக் கொண்ட குகேஷ், 58 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 7.5 புள்ளியுடன் புதிய உலக சாம்பியன் ஆனார். 18 வயதான குகேஷ், உலக செஸ் சாம்பியன் ஆன, இளம் வீரர் என சாதனை படைத்தார்.
ஆனந்திற்கு அடுத்து…
இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 55. ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் (2007-2013) பட்டம் வென்றார். தற்போது ஆனந்துக்குப் பின் உலக சாம்பியன் ஆன இரண்டாவது இந்தியர் ஆனார் குகேஷ்.

கனவு நிறைவேறியது
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் ஆனந்த கண்ணீர் வடித்தார். பிறகு வெற்றி குறித்து அவர் கூறுகையில், என்னை நேசித்து வரும் நாட்டு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். லீரென் தோல்விக்கு எனது வருத்தத்தை கூறுகிறேன். போட்டிக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன். இரண்டு வருட பயிற்சிக்கு பின் கிடைத்த வெற்றி இது. 11 ஆண்டுகளுக்கு முன் சாம்பியன் பட்டம் இந்தியாவிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஒரு இளம் செஸ் வீரரின் கனவு எதுவோ அது நிறைவேறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பாராட்டு
செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
ஜனாதிபதி
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமை பெற்ற குகேஷ்க்கு வாழ்த்துகள். அவர் இந்தியாவை பெருமை அடையச் செய்துள்ளார். அவரது வெற்றி, செஸ் விளையாட்டின் தலைமையகம் என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துக் கொண்டு உள்ளது. எதிர்காலம் புகழ்பெற ஒவ்வொரு இந்தியரின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்
பிரதமர் மோடி
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மகத்தான சாதனைக்கு குகேஷ்க்கு வாழ்த்துகள். இது அவரது ஒப்பற்ற திறமை, கடின உழைப்பு மற்றும் தளராத உறுதி ஆகியவற்றால் சாத்தியம் ஆகி உள்ளது. அவரது வெற்றி, செஸ் விளையாட்டின் வரலாற்றில் அவரது பெயரை பொறித்தது மட்டுமல்லாமல், மில்லியன்கணக்கான இளம் மனங்களை பெரிய கனவு காணவும், சிறந்து விளங்கவும் தூண்டி உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 18 வயதில் இளம் செஸ் வீரர் என்ற பெருமை பெற்ற குகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்குவதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் தக்க வைத்து உள்ளது. உங்களால் தமிழகம் பெருமை கொள்கிறது எனக்கூறியுள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்க்கு மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.