
மலேசிய தமிழ் பத்திரிகையாளருக்குப் பெருமை சேர்த்த நிகழ்வாக, மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், கடந்த நாற்பது ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் தடம் பதித்து வந்துள்ள செ.வே. முத்தமிழ் மன்னன், மலேசிய ஊடக கவுன்சில் நிறுவன வாரிய உறுப்பினராக 15-7-2025 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம், உலக வாணிப மையத்தில் மிக விமரிசையாக நடைபெற்ற செய்தியாளர்கள் தின விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
விழாவின் போது தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில், ஊடக கவுன்சில் வாரியத்தின் 12 புதிய உறுப்பினர்களின் பட்டியலை வெளியிட்டார்.
அந்த பட்டியலில் செ.வே. முத்தமிழ் மன்னனின் பெயரும் இடம்பெற்றிருப்பது, தமிழ்ப்பத்திரிகை துறைக்கும், மலேசியத் தமிழர்களுக்கும் பெரும் மரியாதையாகக் கருதப்படுகிறது.
கடந்த 15-7-2025 ஆம் தேதி புத்ரா ஜெயாவில் நடைபெற்ற நிகழ்வில் செ.வே.முத்தமிழ் மன்னன் உட்பட 12 பேருக்கு தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் நியமன சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
