
மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் மகளிர் இயக்கம் (கெபிமா), ஜாக்கிம் மற்றும் மஸ்ஜிட் இந்தியா பள்ளி வாசல் ஆகியோரின் இணை ஏற்பாட்டில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு அக்டோபர் 11ஆம் தேதி (சனிக்கிழமை) புத்ராஜெயாவில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு துவாங்கு மிஸான் ஜைனால் அபிடின் பள்ளிவாசலின் ஷேக் டாவுட் அல்-ஃபாதோனி மண்டபத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.
இந்நிகழ்வை பிரதமர் துறை அமைச்சர் செனட்டர் டத்தோஸ்ரீ ஹாஜி முகமட் நயிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
இந்த மாநாடு மஸ்ஜிட், மதரஸா மற்றும் சூராவ் பொறுப்பாளர்களின் கலந்தாலோசிப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கெபிமா தோற்றுநரும் ஆலோசகருமான ஜனாப் முகமது காதிர் அலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இந்த மாநாட்டில் 5 முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதில் முக்கியமாக உஸ்தாத் மற்றும் இமாம்களுக்கான பெர்மிட் மற்றும் விசா, அனைத்து மதரஸாக்களிலும் ஒரே பாடத்திட்டம், மதரஸா–சூராவ்களை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தல், உள்நாட்டு உஸ்தாத் மற்றும் இமாம்களை உருவாக்குதல், தரமான மதக் கல்வி வழங்குதல் ஆகியவை அடங்கும்.”
மேலும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்தல், உஸ்தாத் மற்றும் இமாம்களின் சம்பளத்தை பரிசீலித்தல், விசா விண்ணப்பங்கள் ஆசிரியர்கள் மற்றும் இமாம்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானித்தல் போன்ற ஆலோசனைகளும் இடம்பெற உள்ளன.
இம்மாநாட்டில் மதரஸா பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், மார்க்க அறிஞர்கள், உஸ்தாத் மார்கள், இமாம்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முகமது காதிர் அலி மேலும் தெரிவித்ததாவது,
“இந்த மாநாடு, நடப்பு சூழ்நிலைக்கேற்ப சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பலரின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது. கெபிமாவின் அழைப்பை திறந்த மனதுடன் ஏற்று அனைவரும் பங்கேற்க வேண்டும்.”
இந்நிகழ்வுக்கான முன்னோட்டச் சந்திப்பில் சிற்றுண்டி வழங்கி ஆதரவு தந்த டத்தோ ஸமாருல் கான் அவர்களுக்கு முகமது காதிர் அலி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
🗓️ நாள்: 11 அக்டோபர் 2025 (சனிக்கிழமை)
📍 இடம்: துவாங்கு மிஸான் ஜைனால் அபிடின் பள்ளிவாசல், புத்ராஜெயா
🕗 நேரம்: காலை 8.00 மணி – மாலை 4.00 மணி



