
இந்திய உயர்ஸ்தானிகராலயமும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையமும் இணைந்து, 12ஆவது அனைத்துலக யோகா தினத்தை இன்று கோலாலம்பூரில் சிறப்பாகக் கொண்டாடின.
“ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” (Yoga for Healthy Ageing) என்ற கருப்பொருளில் SSU கிளப் அமான் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 1,100-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக செனட்டர் மாண்புமிகு புவான் சரஸ்வதி கந்தசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித் திறன் மிக்க சமூகத்தை உருவாக்குவதில் யோகாவின் பங்களிப்பு முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொறுப்புத் தூதராக (Charge d’Affaires a.i.) பணியாற்றும் ஸ்ரீ ஹிதேஷ் ராஜ்பால் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட அனைத்துலக யோகா தினம், இன்று மலேசியாவிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற மக்கள் இயக்கமாக வளர்ந்திருப்பதை எடுத்துரைத்தார்.
இந்திய AYUSH அமைச்சின் பொதுவான யோகா நடைமுறைகளின் அடிப்படையில் 40 நிமிடங்கள் யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தூதர்கள், அரசு அதிகாரிகள், மலேசிய இந்தியர்கள், பள்ளி மாணவர்கள், யோகா அமைப்புகள், யோகா பயிற்சியாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

மேலும், உலக முய்த்தாய் (Muaythai) சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மலேசியா வந்திருந்த இந்திய முய்த்தாய் அணியினரும் இந்த யோகா தினக் கொண்டாட்டத்தில் இணைந்து, உடல் தகுதி, மன ஒழுக்கம் மற்றும் விளையாட்டு திறனை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைத்த மலேசிய அமைப்புகள், தன்னார்வலர்கள் மற்றும் யோகா ஆர்வலர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது நன்றியைத் தெரிவித்தது. ஆரோக்கியமான முதுமை மற்றும் முழுமையான நல்வாழ்வை நோக்கி யோகாவின் செய்தியை அனைவரும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது.



