
மலாய் சமூகத்தின் சிறப்பு உரிமைகள் கூட்டரசு அரசியலமைப்பின் கீழ் தெளிவாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதால், அதனை எந்தவொரு அரசியல் கட்சியும் தனக்குச் சொந்தமானதாகக் கூறவோ அல்லது தேர்தல் அரசியலுக்காக பயன்படுத்தவோ கூடாது என்று தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அரசியலமைப்பில் உள்ள இவ்வுரிமைகளை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு அவசியம் என்பதால், அவற்றை எளிதில் மாற்ற முடியாது என்று விளக்கமளித்தார்.
“மலாய் சமூகத்தின் சிறப்பு உரிமைகள் அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்டுள்ளன. எனவே, எந்தக் கட்சியும் அந்த உரிமைகளை தாங்களே பாதுகாக்கும் ஒரே தரப்பு என்று கூறுவது பொருத்தமல்ல,” என்று அவர் கூறினார்.
மேலும், தேர்தல் காலத்தில் சமூக ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அண்மையில், அம்னோ மற்றும் தேசிய முன்னணி மட்டுமே மலாய் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறியிருந்த கருத்தை மேற்கோள்காட்டியே யுனேஸ்வரன் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
சமூக நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



