27.6 C
Kuala Lumpur
Wednesday, July 8, 2026

Vetri

80 முதல் 90% வாக்குப்பதிவு அவசியம்; ஜொகூர் மக்களுக்கு மஸ்லீ மாலிக் அழைப்பு

🔥 Views : 4,098
👁 Reading Now : 62

ஜொகூர் மாநிலத் தேர்தலில் 80 முதல் 90 சதவீதம் வரை வாக்காளர் வருகை பதிவாக வேண்டும் என்றும், அதுவே அடுத்த மாநில அரசுக்கு வலுவான மக்கள் ஆணையை வழங்கும் என்றும் நம்பிக்கை கூட்டணியின் புதேரி வாங்க்சா வேட்பாளர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

RTM, Astro Awani மற்றும் Sinar Harian இணைந்து நடத்திய ஜொகூர் தேர்தல் நேரலை கலந்துரையாடலில் பேசிய அவர், அதிக வாக்காளர் பங்கேற்பே மக்களின் உண்மையான விருப்பத்தை பிரதிபலிக்கும் என்றார்.

“ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்குக்கும் மதிப்பு உண்டு. வாக்கு என்பது மக்களின் ஆணை. அதிகமானோர் வாக்களித்தால், அந்த ஆணையும் வலிமையானதாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

தான் எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை என்றும், நேர்மையுடன் மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு அதிக வாக்குப்பதிவு சாதகமாக அமையும் என்றும் மஸ்லீ தெரிவித்தார்.

“குறைவானோர் மட்டுமே வாக்களித்தால், வெற்றி பெறுபவர்களுக்கு முழுமையான மக்கள் ஆணை கிடைக்காது. அவர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றாலும், மக்களின் முழு ஆதரவைப் பெற்றதாகக் கருத முடியாது,” என்றார்.

இதனால், ஜொகூருக்கு வெளியே, குறிப்பாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஜொகூர் வாக்காளர்கள் அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பி வாக்களிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த விவாத நிகழ்ச்சியில் ஜொகூர் பாரிசான் நேஷனல் தலைவர் ஓன் ஹாஃபிஸ் காசியும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்துகொள்ளவில்லை.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஸ்லீ, இதுபோன்ற விவாத மேடைகள், உணர்ச்சிகளை விட கொள்கைகள், ஆதாரங்கள் மற்றும் திட்டங்களின் அடிப்படையில் வேட்பாளர்களை மதிப்பிட வாக்காளர்களுக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறினார்.

“நம் நாட்டில் விவாத அரசியல் கலாச்சாரம் மீண்டும் உருவாக வேண்டும். மக்கள் உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல், வாதங்கள், உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles