
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வணிக வளாகங்களில் அமைந்துள்ள சுராவ் மற்றும் முசோல்லா தொழுகை அறைகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படாது என்று சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளார்.
சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (MAIS) தலைவர் டத்தோ சாலேஹுடின் சயிடின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இம்முடிவு இஸ்லாமிய சமயத்தின் தலைவராக இருக்கும் சுல்தானின் அரச அதிகாரத்தின் (Prerogative) அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சமய நிர்வாகம் தொடர்பான விவகாரங்களிலும், குறிப்பாக சுராவ் அல்லது முசோல்லாக்களில் ஜும்ஆ தொழுகை நடத்த அனுமதி வழங்குவது தொடர்பிலும் இறுதி அதிகாரம் சுல்தானுக்கே இருப்பதாக அவர் கூறினார்.
நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் ஜும்ஆ தொழுகைக்கான சுராவ்களை அமைக்க வேண்டும் என்ற கூட்டரசு அரசாங்கத்தின் பரிந்துரையை MAIS வரவேற்பதாக தெரிவித்த அவர், சிலாங்கூரில் அதன் அமலாக்கம் மாநிலச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்றார்.
பிரதமர் துறை (சமய விவகாரம்) அமைச்சர் டாக்டர் ஜுல்கிஃப்லி ஹசான் வெளியிட்ட அறிக்கையின் மூலம் கூட்டரசு அரசின் நிலைப்பாட்டை MAIS கவனத்தில் கொண்டுள்ளதாகவும், இருப்பினும் சிலாங்கூரில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களும், சுல்தானின் உத்தரவும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.



