
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பானின் இறுதிக்கட்ட பிரச்சாரக் கூட்டம், பொதுமக்களின் அமோக வரவேற்புடன் உற்சாகமாக நடைபெற்றதாக பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினரும், செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த நிறைவு லாயாங்-லாயாங் பிரச்சாரக் கூட்டம், பக்கத்தான் ஹரப்பானுக்கு மக்கள் மத்தியில் நிலவும் வலுவான ஆதரவையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, பிரதமரும் பக்கத்தான் ஹரப்பான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உரையாற்றினார். அதற்கு முன்னதாக அதே நாளில் புக்கிட் காயு ஹித்தாமில் நடைபெற்ற நிகழ்ச்சி உட்பட மூன்று நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னரும், மக்கள் சந்திப்பை தவறவிடாமல் லாயாங்-லாயாங்கிற்கு வருகை தந்து உரையாற்றிய அவரது அர்ப்பணிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றதாக டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.
இந்த பிரம்மாண்ட “லாயாங்-லாயாங்” பொதுக்கூட்டம், கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவரான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் குணா பாலகிருஷ்ணனுக்கு மக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்றும், ஜொகூரின் வளர்ச்சிக்கும் மலேசியாவின் சிறந்த எதிர்காலத்திற்கும் பக்கத்தான் ஹரப்பானை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.
“வலுவான ஜொகூரையும், வளமான மலேசியாவையும் உருவாக்கும் பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவளிப்போம்,” என்று டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தனது அறிக்கையில் தெரிவித்தார்.



