
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் (MHS) ஆட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில், தலைவர் தங்க கணேசன் தலைமையிலான வெற்றி கூட்டணி வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெற்றனர்.
இன்று சர்வே திருமுருகன் கோவில் மண்டபத்தில் மலேசிய இந்து சங்கத்தின் 49-ஆவது ஆண்டு மாநாடும், ஆட்சிக்குழுவுக்கான 9 உச்சமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலும் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், தற்போதைய தலைவர் தங்க கணேசன் தலைமையிலான வெற்றி கூட்டணி மற்றும் டாக்டர் முரளி தலைமையிலான மறுமலர்ச்சி அணி ஆகியவை நேருக்கு நேர் போட்டியிட்டன.
உறுப்பினர்களின் விறுவிறுப்பான வாக்குப்பதிவைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், வெற்றி கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்று ஆட்சிக்குழுவில் இடம்பிடித்தனர்.
வெற்றி கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
- பொன் சந்திரன் – 1,027 வாக்குகள்
- சுகுமாரன் – 1,026 வாக்குகள்
- முனைவர் லிங்கேஸ்வரன் – 1,026 வாக்குகள்
- ஜி. முனிஸ்வரன் – 1,021 வாக்குகள்
- உமாசுதன் – 1,009 வாக்குகள்
- எம். ராதா – 1,001 வாக்குகள்
- எம். குமார் – 985 வாக்குகள்
- பரமசிவம் – 981 வாக்குகள்
- விஜய பாஸ்கர் – 980 வாக்குகள்
இந்தத் தேர்தல் முடிவின் மூலம், தங்க கணேசன் தலைமையிலான அணிக்கு உறுப்பினர்கள் மீண்டும் வலுவான ஆதரவை வழங்கியிருப்பது வெளிப்பட்டுள்ளது. புதிய ஆட்சிக்குழு, மலேசிய இந்து சங்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி, சமயப் பணிகள் மற்றும் சமூக நலத் திட்டங்களை முன்னெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உறுப்பினர்களிடையே நிலவுகிறது.



