
சிரம்பான்: நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய அரசின் எந்தத் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும், பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் தெரிவித்துள்ளார்.
அம்னோ துணைத் தலைவரும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் ரந்தாவ் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான அவர், தேர்தல் பிரச்சாரத்தின் நோக்கம் அனைத்து வாக்காளர்களிடமும் கட்சியின் செய்தியை கொண்டு சேர்ப்பதே தவிர, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவது அல்ல என்று விளக்கமளித்தார்.
“நாங்கள் எதையும் பெரிதுபடுத்தவோ அல்லது மோசமாக்கவோ விரும்பவில்லை. பிரச்சாரத்தின் போது எங்களது செய்தி அனைத்து வாக்காளர்களையும் சென்றடைவதை உறுதி செய்வதே எங்களது நோக்கம். இதில் எந்தவொரு தனிப்பட்ட தாக்குதலுக்கும் இடமில்லை,” என்று அவர் கூறினார்.
மேலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்மை அமைச்சரவையில் இருந்து விலகுமாறு உத்தரவிட்டால், அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
“பிரதமரிடமிருந்து ராஜினாமா செய்யுமாறு உத்தரவு வந்தால், அதற்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. நான் அந்த உத்தரவை மதிப்பேன்,” என்று முகமது ஹசான் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளை அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் தாக்கிப் பேசக் கூடாது என்றும், அவ்வாறு அரசியல் செய்ய விரும்பினால் முதலில் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



