
அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது ஓய்வெடுத்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் முழுமையாக குணமடைய அனைத்து மலேசியர்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை தாம் மேற்கொள்ளவிருந்த சிகிச்சை குறித்து பிரதமர் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறிய ஜாஹித், அவர் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கு முன்பு குறுகிய கால ஓய்வு மட்டுமே தேவைப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“அவர் விரைவில் குணமடைந்து, நாட்டிற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவையாற்றுவதற்கான உடல் நலத்தையும் வலிமையையும் பெற நாம் அனைவரும் பிரார்த்திப்போம்,” என்று அவர் கூறினார்.
அறுவை சிகிச்சை சிறியதாக இருந்தாலும், பிரதமருக்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் ஓய்வு தேவைப்படும் என்றும் ஜாஹித் தெரிவித்தார்.
கிரிக்கில் உள்ள காம்போங் ஏர் பனூனில் பழங்குடியினருக்கான சமூக சுகாதாரத் திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமரின் மருத்துவக் குழுத் தலைவர் டாக்டர் அஸ்ரி ரங்கா அப்துல்லா ராமையா, பிரதமர் அன்வார் திட்டமிடப்பட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை (Laparoscopic Surgery) வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரதமர் தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும், அவர் விரைவில் வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


