
செத்தியாவங்சா, ஜாலான் ரெஜாங் பகுதியில் உள்ள திறந்தவெளி காலை சந்தையைச் சுற்றியுள்ள பொதுச் சாலை ஒதுக்கீட்டுப் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 18 கட்டமைப்புகளை கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) நேற்று இடித்து அகற்றியது.
இந்த ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில் DBKL உடன் மலேசிய காவல்துறை, தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மற்றும் Air Selangor ஆகிய தரப்புகளும் இணைந்து செயல்பட்டன.
1974ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகள் மீது இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக DBKL தெரிவித்தது.
இதனுடன் தொடர்புடைய மேலும் இரண்டு அமலாக்க நடவடிக்கைகளில், சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்த சில பொருட்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
பொதுச் சாலை ஒதுக்கீட்டுப் பகுதிகளை அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டமைப்புகளை அமைப்பது பொதுமக்களின் பாதுகாப்புக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடும் என DBKL தெரிவித்துள்ளது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில், அனுமதியின்றி அமைக்கப்படும் கட்டமைப்புகளுக்கு எதிராக கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் DBKL எச்சரித்துள்ளது.



