
ரெம்பாவ் அம்னோ துணைத் தலைவர் டாக்டர் அவலுடின் சயீத், 16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவலுடினை சபாநாயகராகத் தேர்வு செய்வதற்கான தீர்மானத்தை நெகிரி செம்பிலான் மந்திரி புசார் இஸ்மாயில் லாசிம் முன்மொழிந்த நிலையில், லிங்கி சட்டமன்ற உறுப்பினர் ஃபைசல் ராம்லி அதனை வழிமொழிந்தார்.
இதையடுத்து, 66 வயதான அவலுடின், விஸ்மா நெகிரியில் நடைபெற்ற 16ஆவது நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தின் முதல் பதவிக்காலத்திற்கான முதலாவது சிறப்பு அமர்வில், சட்டமன்றச் செயலாளர் முகமது அமின் லுடின் முன்னிலையில் சபாநாயகராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
முன்னதாக, சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு ஒன்று பெறப்பட்டுள்ளதாக அமின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப சபாநாயகர் பதவிக்கான பரிந்துரை பெறப்பட்டதாகவும், பரிந்துரைக்கப்படும் நபர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவியை ஏற்று பணியாற்றத் தயாராக இருப்பதை முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.
டாக்டர் அவலுடின் சயீத் ஏற்கனவே 2013 முதல் 2018ஆம் ஆண்டு வரை நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற சபாநாயகராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தச் சிறப்பு அமர்வில் மொத்தமுள்ள 36 சட்டமன்ற உறுப்பினர்களில் 35 பேர், புதிய பதவிக் காலத்திற்கான மக்கள் பிரதிநிதிகளாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.



