
கோலாலம்பூர், ஜாலான் புடுவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயிலில், வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் மகா கும்பாபிஷேகத் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, நேற்று புதன்கிழமை யாகசாலை பூஜைகள் பக்திப் பரவசத்துடன் தொடங்கின.
தமிழகத்தைச் சேர்ந்த பிச்சைக் குருக்கள், தேவஸ்தானத்தின் பிரதான குருக்களான சிவஸ்ரீ சிவகுமார் பட்டர், சிவஸ்ரீ சிவானந்தா குருக்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்தப் புனித யாகசாலை பூஜையில், வேத மந்திரங்கள் முழங்கின. புனித அக்னி வளர்க்கப்பட்டு சிறப்பு திரவியங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், கோயில் வளாகமே பக்தி மணம் கமழும் ஆன்மிகத் தலமாக மாறியது.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெறும் யாகசாலை பூஜைகளின் தொடக்க நிகழ்வாக நேற்றைய பூஜை அமைந்தது. தொடர்ந்து பல்வேறு கால யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
இந்தப் புனித நிகழ்வுகளின் உச்சமாக, வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 10.40 மணி வரை, கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயிலின் மகா கும்பாபிஷேகத் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
நேற்று யாககுண்டலத்தில் ஏற்றப்பட்ட புனித அக்னி, ஞாயிற்றுக்கிழமை கோபுரக் கலசங்களில் புனித நீர் பொழியும் மகா கும்பாபிஷேகத் தருணத்தில் பக்தி வெள்ளமாகப் பெருக்கெடுக்கத் தயாராகியுள்ளது.



