
மானிய விலையில் வழங்கப்படும் பாக்கெட் சமையல் எண்ணெயை வாங்கி, அதனை மீண்டும் பாட்டில்களில் அடைத்து ‘பூஜை எண்ணெய்’ என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த கும்பலின் நடவடிக்கை கோலாலம்பூரில் அம்பலமாகியுள்ளது.
கோலாலம்பூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ‘Ops Tiris 4.0’ நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நான்கு சோதனைகளில், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய மூன்று வழக்குகள் கண்டறியப்பட்டதாக அதன் துணை இயக்குநர் முகமது ஷஹ்ரான் முகமது அர்ஷாத் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் சுமார் 9 டன் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதன் மதிப்பு ஏறக்குறைய 165,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
செந்துல் மற்றும் சௌ கிட் பகுதிகளில் உள்ள நான்கு வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அவற்றில் இரண்டு உரிமம் பெற்ற மொத்த விற்பனை வளாகங்களும், இரண்டு உரிமம் பெறாத வளாகங்களும் அடங்கும்.
விசாரணையின்படி, மொத்த விற்பனையாளர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் பாக்கெட்டுகளில் மானிய விலையில் சமையல் எண்ணெயை வாங்கி, பாக்கெட்டுகளை வெட்டி எண்ணெயை மீண்டும் பாட்டில்களில் நிரப்புவதே கும்பலின் செயல்முறையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அந்த எண்ணெய் ஒன்று, இரண்டு, ஐந்து முதல் 15 கிலோ வரையிலான அளவுகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு, சிலவற்றில் சிறிதளவு சேர்க்கைப் பொருட்கள் கலக்கப்பட்டும், சிலவற்றில் எந்தக் கலவையும் இல்லாமலும் ‘பூஜை எண்ணெய்’ எனக் கூறி கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள சில்லறை சந்தைகளில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மானிய சமையல் எண்ணெயை லிட்டருக்கு சுமார் RM2.45க்கு வாங்கிய கும்பல், அதையே ‘பூஜை எண்ணெய்’ என்ற பெயரில் லிட்டருக்கு சுமார் RM7.50க்கு மறுவிற்பனை செய்ததாக முகமது ஷஹ்ரான் தெரிவித்தார்.
மானியப் பொருட்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்புகள் மீது மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



