
தாபோங் ஹாஜி மற்றும் பெல்டா தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் மீதான விசாரணைகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடாது என்றும், சம்பந்தப்பட்ட அமைப்புகள் தங்களுக்குரிய சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் சுயமாகச் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு மலேசிய காவல்துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) உள்ளிட்ட விசாரணை அமைப்புகளிடம் உள்ளது என்று அன்வார் கூறினார்.
விசாரணையின் முடிவில் வழக்குத் தொடர வேண்டுமா இல்லையா என்பதை சட்டத்துறை தலைவர் (Attorney General) தீர்மானிப்பார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை நிர்ணயிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பு என்றும் அவர் விளக்கினார்.
“விசாரணை நடத்த வேண்டுமா என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்? காவல்துறையும் MACC-யும். வழக்குத் தொடர வேண்டுமா என்பதை யார் தீர்மானிக்கிறார்? சட்டத்துறை தலைவர். தண்டனையை யார் நிர்ணயிக்கிறார்? நீதிபதி. பிரதமர் அல்ல,” என்று அன்வார் திட்டவட்டமாகக் கூறினார்.
எனவே, தாபோங் ஹாஜி மற்றும் பெல்டா தொடர்பான விசாரணைகளை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கருதுவது சரியல்ல என்றும், சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட அமைப்புகளே முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.



