
பான் போர்னியோ நெடுஞ்சாலையில் இடம்பெற்ற சாலை விபத்தில் படுகாயமடைந்த தம்பதியருக்கு பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அஹ்மத் ஷா உடனடியாக உதவி வழங்கினார்.
சுல்தான் லுண்டுவிலிருந்து கூச்சிங்கிற்கு காரில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் மற்றும் கார் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்றைக் கண்டதாக பகாங் அரண்மனை தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
விபத்தில் தம்பதியர் இருவரும் படுகாயமடைந்திருந்ததை அறிந்த சுல்தான், தனது வாகன அணிவகுப்புடன் வந்த ஆம்புலன்ஸை உடனடியாகப் பயன்படுத்தி அவர்களை லுண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட இருவருக்கும் தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்த பின்னரே, அல்-சுல்தான் அப்துல்லாஹ் கூச்சிங்கிற்கான தனது பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த ஜனவரி மாதமும், கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவுவதற்காக பகாங் சுல்தான் தனது பயணத்தை நிறுத்தியிருந்தார்.
அப்போது விபத்தில் காயமடைந்த நபரை சிகிச்சைக்காக தெமர்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தனது காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு அவர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



