
தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஆகஸ்ட் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் குறிப்பிட்ட ரயில் மற்றும் பேருந்து சேவைகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என்று Rapid KL அறிவித்துள்ளது.
இதன்படி, LRT, MRT மற்றும் KL Monorail உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளின் இயக்க நேரமும் நீட்டிக்கப்படவுள்ளது.
தேசிய தினக் கொண்டாட்டங்களின்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் தேவை மற்றும் நிலையங்களில் நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ரயில் சேவைகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Sunway வழித்தட BRT, தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்து சேவைகள் மற்றும் On-Demand சேவைகளும் 24 மணி நேரம் செயல்படும்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் தேசிய தின முன்தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஆகஸ்ட் 31ஆம் தேதி காலையில் புத்ராஜெயாவில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் எளிதாகப் பயணிக்க வசதியாக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புத்ராஜெயாவில் நடைபெறும் தேசிய தினக் கொண்டாட்டத்திற்குச் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, இரண்டு வழித்தடங்களில் 103 இலவச feeder பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
மேலும், பயணிகளின் நடமாட்டத்தைச் சீராக நிர்வகிக்கவும் நிலைமையைக் கண்காணிக்கவும் 5,000-க்கும் மேற்பட்ட Rapid KL பணியாளர்கள் ஆகஸ்ட் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தேசிய தினக் கொண்டாட்டங்களின்போது சாலை நெரிசலைக் குறைப்பதுடன் பயணத்தை எளிதாக்கவும், பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு Rapid KL அறிவுறுத்தியுள்ளது.



